பக்கம்:தமிழ்க் காதல்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைத் தோற்றம்

129


உண்டு எனவும், எண்ணத்தைத் திறம்பட ஆளும் மதுகை இருபாலார்க்கும் உரியதே எனவும் பண்டைத் தமிழ்ச் சமுதாய, மனப்போக்கை அறிந்து கொள்கின்றோம். அகத்தில், குடும்பவுலகில் தலைவியே இறைமை உடையாள்; அவளே வேந்தாவாள். மனைவி, இல்லாள் என்னும் வீட்டுச் சொற்கள் அவளுக்கே உரியவை. இவற்றிற்கு நிகரான ஆண்பாற் கிளவிகள் இல்லாமை நினையத்தகும். திருமணம் என்பது தலைவன் தன் அகவாழ்வின் உரிமையெல்லாம் மனைவிக்கு வழங்கும் ஆவணக்களரி. புறத்தொழுக்கம் கண்ட தலைவனை இல்லில் நுழையற்க என்று இடித்துத் திருத்தும் சொல்லுரிமையும் உடையவள் தலைவி. இதனை “அஞ்ச வந்த உரிமை” (1091) என்பர் தொல்காப்பியர். வாயில் வேண்டல், வாயில் மறுத்தல், வாயில் நேர்தல் என்ற துறைகளெல்லாம் கற்புடைய மனைவியின் உரிமையிற் பிறந்தவை. ஆதலின் நம் சமுதாயத்தில், பெண்ணிற்கு மதிப்புக் குறைவு எனவும், கரணக்குறி அஃதாவது திருமணம் காட்டும் அடையாளம் அடிமைப் பொறி எனவும் கருத்துப்படுத்தல் என்னானும் பொருந்தாது. காதலர்களின் கள்ளத்தனத்தையும் கைவிடுதலையும் தடுத்தற்குச் செய்யப்படுவது கரணம் என்றலும் பொருந்தவே பொருந்தாது. o - திருமணச் சடங்கு கற்பாகாது, கற்பைப் பிறப்பிக்காது, காதற்களவு நடத்தும் குமரி நங்கைக்கு “யாய்” என்று பெயர் கொடுக்கின்றார் ஒரம்போகியார் (ஐங், 5-10)"வேட்டோளே யாயே”) நாளை மணந்து மனைவியாய் மகப்ப்ெற்றுத் தாயாவாள் என்பதில். தடையென்னோ? ஈண்டுத் தலைவியையாய் என்றது எதிர்ப்பட்ட ஞான்றே கற்புப் பூண்டொழுகுகின்ற சிறப்பை நோக்கி” என்பர் ஐங்குறுநூற்றின் முதலுரையாசிரியர். இவ்வுரை உரைகளுள் நல்லது, சிறந்தது. கற்பொழுக்கம் திருமணத்தால் உண்டாவதில்லை. உரிய காதலனை எதிர்ப்பட்ட அப்பொழுதே அவள் அவ்வொழுக்கத் தலைப்பட்டாள் என்று இவ்வுரை அறிவிக்கின்றது. கரணம் (சடங்கு) என்பது திருமண அடையாளம்; பெண்ணொருத்தி கன்னிமை கழிந்து மனைவிமை புக்காள் என்பதனைக் காட்டும் மனையணி என்பது என் துணிபு. IX சிலம்பு கழி நோன்பு சங்க காலத்து வழக்கில் இருந்த கரணம் யாது? அன்று கரணம் இருந்தது, அது வேண்டுவது எனச் சமுதாய மரபைக் கூறினாரே யன்றி, நடைமுறையில் மேற்கொண்ட கரணக்குறி இதுவெனத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/143&oldid=1238453" இலிருந்து மீள்விக்கப்பட்டது