பக்கம்:தமிழ்க் காதல்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

தமிழ்க் காதல்


ஏறுகோளை ஒரு துறைப்படுத்தி இணைத்துக் கொண்டிருக்கும் போது, ஏலாது என்று நாம் நன்கு எண்ணாமற் சொல்லிவிடலாமா? அவர்கள் எண்ணவில்லை, மயங்கினர், வழுவினர் என்று மொழிவது நம் எண்ணவுயர்ச்சிக்குச் சான்றாகுமா? இவ்வெதிர் வினாக்கள் நம் சிந்தனையை மேலும் தூண்டுகின்றன. அகத்திணைத் தமிழ்ச் சமுதாய வழக்கோடு ஒட்டியது என்று மேலே விளக்கமாக அறிந்தோம். ஒரு நில மக்களிடை ஒரு மணவழக்கம் மிகுதியாகக் காணப்படின், அந்நில மக்களின் காதலைப் புரியும் போது, அவ்வழக்கத்தை அகத்திணை ஒளிக்க லாமா? கூடாதாதலின், ஏறுகோள் இடம் பெறலாயிற்று. பொதுவாக ஏறுதழுவும் வழக்கம் அகத்திணைக்கு முரணாகாது, ஒவ்வாக் காதலை வளர்க்கவேண்டி இவ்வழக்கம் எழுந்ததன்று. நாளை ஒருத்தியைக் காமுறுங் கால், அவளது காளையை அடக்க வேண்டிவரும் என்று முல்லைநில ஆடவர்கள் அறிவர். அதற்கேற்பக் குமரர்களை முல்லைச் சமுதாயம் பயிற்றியிருக்கும். ஆதலின் உரிய ஏற்றை மடக்கி ஒத்த காதலியர்களைக் கைப்பிடித்த காதலர்கள் பலரிருப்பர். இந் நன்னிகழ்வுகளைத்தான் அகத்தினை கூற முற்படுகின்றது. ஏற்றை அணைக்கமாட்டாது காதலில் தோல்வி யுண்ட இளைஞரும் இளைஞரியரும் இருந்திருப்பர். ஏற்றை ஒடுக்க - முனைந்துழி, அதன் கொம்பு கிழிக்க உயிர் புறங்கொடுத்த வீரர்களும் இருந்திருப்பர். ஒருத்தியின் ஏற்றினை அவள் காதற்பகைஞரும் அடக்கியிருப்பர். அடக்கியக்கால் அவ்வொருத்தி தன்னுயிரை அடக்காது விட்டிருப்பாள், அல்லது மனத்தைவிட்டு மன்பதைக்கும் பெற்றோர்க்கும் அஞ்சி மனங்கொண்டிருப்பாள். இத்தகையவை நிகழ்ந்திருக்கும் என்பதை நாம் மறுக்கவில்லை; எனினும் இவ்வின்னா' நிகழ்வுகளை அகத்திணைக்குப் பொருளாக்கவில்லை என்பதை வலியுறுத்துவன். அகத்திணைக்குப் பொருள் எது? அப்பொருளின் வரம்பு எது? என்பவற்றைப் பிற்பகுதியில் தெளிவீர்கள். உள்ளப்புணர்ச்சி அடிப்படையில் எழுந்த ஏறுகோள்களையே அகத்திணை துவலுகின்றது என்பதை மறவற்க. உலகியலை விடாதும் ஒத்த மனத்தை விடாதும் மக்கட்காதலைப் புனைவது தமிழ் அகத்திணை என்பதற்கு ஏறுதழுவும்துறை சான்றாகும், இத்துறைப்பாடல்களை மிக விழிப்போடு புலவர்கள் பாடுவர்: பாடியுளிர்அவளைக் காதலித்த ஆயனே ஏற்றை வயப் படுத்தினான் எனவும், இவ்வேற்றை வென்ற இவனே அவள் காதலித்தவன் எனவும் உள்ளப்புணர்ச்சி முன்தோன்ற எடுத்துக் காட்டியுளர். ஒன்றிப்புகளினத் தாயமகற் கொள்ளிழாய் இன்றெவன் என்னை எமர்கொடுப்பதன்றவன் மிக்குத்தன் மேற்சென்ற செங்காரிக் கோட்டிடைப் புக்கக்காற் புக்கதென் நெஞ்சு (கலி. 105)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/162&oldid=1238497" இலிருந்து மீள்விக்கப்பட்டது