பக்கம்:தமிழ்க் காதல்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைத் தோற்றம்

153


நீர்ப்பரப்பைக் குறிப்பது என்பதனையும், தீபகற்பகமாகிய நிலவடிவைச் சுட்டுவது என்பதனையும் இடைக்கால உரையாசிரிய ரெல்லாம் எண்ணிப் பார்க்கவில்லை. இத்தமிழகத்தைப் “படுதிரை வையம்” என்பர் (147) தொல்காப்பியர். "நெடுங்கடலும் தன்னிர்மை குன்றும்” என்ற குறளைப் பாடுதற்குத் தாய்நாட்டைச் சூழ்ந்து கிடக்குங் நெடுங்கடல் அழுவம் வள்ளுவர் நெஞ்சை இயக்கியிருத்தல் கூடும். தமிழ்நாடு கடல் சூழ்ந்த இயற்கைத்து ஆதலின், தமிழர்கள் தொன்றுதொட்டே கடல் வாணிகர்களாகத் திகழ்ந்தனர். “கலத்தினும் காலினும் தருவனர் ஈட்டக் குலத்திற் குன்றாக் கொழுங்குடிச்செல்வர்” என்று இளங்கோ நீர்வழி நிலவழி வாணிகங்களை மொழிகுவர். “நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும், காலின் வந்த கருங்கறி மூடையும்” என்ற பட்டினப்பாலை அடிகள் அவ்வழிவந்த சரக்குக்களை இயம்புகின்றன. கடல்வழி நெடுஞ் செலவை "முந்நீர் வழக்கம்" என்ற சிறு தொடரால் தொல்காப்பியம் அறையும்.தொன்மைசால் இலக்கணத்தில் இடம்பெறும் அளவிற்குத் தமிழனத்தார் பலர் கடலோடிகளாகவும், வணிகப் பரதர்களாகவும் தொன்று முதிர் இத்தமிழ் ஞாலத்தே விளங்கினர். கண்ணகியின் தந்தை மாநாய்கனைக் கடல் வணிகன் எனவும், கோவலனது தகப்பன் மாசாத்துவானை நிலவணிகன் எனவும் கருத இடனுண்டு. தமிழகம் கடலகமாக இருந்தும், தமிழர்கள் கடலர்களாக இருந்தும், “வருணன் மேய பெருமணல் உலகம்” என்று தொல் காப்பியம் கடற்றிணை (நெய்தற்றிணை) 950 வகுத்திருந்தும், அகத்திணையியலின்கண் “முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை” எனக் காதலனது தனிக் கடற் செலவை நூற்பித்திருந்தும், ஏனோ சங்கச் சான்றோர்கள் பர்லைத்திணையில் நீர்வழிப் பிரிவுகளைப் பாடிற்றிலர்? அப்பிரிவுக்கு ஆற்றாத தலைவியர்தம் இரங்கல்களை நெய்தற்றிணையிலும், கடல்வினை முற்றிய தலைவர்தம் வரவுகளை முல்லைத் திணையிலும் அல்வழிப் புணர்ச்சிகளைக் குறிஞ்சித் திணையிலும் தொடர்ந்து பாடிற்றிலர்? இற்றைச் சங்க விலக்கியத்து வரும் பாலைத்திணைச் செய்யுட்களும் பிறதினைச் செய்யுட்களும் எல்லாம், நிலவழிப் பிரிவுகளையும் வரவுகளையும் புணர்வுகளையும் கூறுவன. அகத்திணை என்பது ஒருபால் நிலத்திணையாகவே உளது. நீர்த்திணைமேலும் அகத்திணைப் பாடல்கள் பாடவேண்டும், பாடியிருத்தல் வேண்டும். சங்கப் புலவோர் நீரகப்பாடல்களை யாக்கத்தவறிவிட்டனர்; தமிழ் மன்பதையின் கடல் வாழ்க்கைமேல் காதற்கவிதை புனையா தொழிந்தனர். கடற்பாலைப் பாட்டு இப் பொதுக்குற்றப் பாட்டிற்கு ஆளாகாச் சங்கப் புலவர் ஒருவரை - ஒருவரையே கண்டேன். மருதன் இளநாகனார் அகப்பாக்கள் எழுபத்து நான்கு பாடிய பெரும் புலவர். அத்துணைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/167&oldid=1238504" இலிருந்து மீள்விக்கப்பட்டது