பக்கம்:தமிழ்க் காதல்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைக் குறிக்கோள்

193


இன்றியமையாமை இல்லை. மக்களின் சமுதாய வாழ்க்கையில், ஒழுக்கமும் உணர்ச்சியும் நோக்கி மங்கல வழக்கு ஏற்படும், வேண்டப்படும். குறியீடுகளே அறிவுத் தெளிவுக்குப் புலவனால் ஆக்கப்படுபவை. அவற்றை மங்கலமாக்கின், எண்ணிய கருத்து மயக்கந்தரும். ஆதலின் குறியீடுகளை நேர்படவே கூறுவர் நூலோர். தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம், மிக்க காமத்து மிடல் என் பவற்றை மங்கலமாக மொழியவில்லையே? உடற்கூறுகள் தம்மையே வெளிப்படையாகச் சொல்லியிருத்தலின் பெருந்திணை என்பதும் வெளிப்படையான குறியீடேயாகும்.

பருவம் வந்த ஒர் ஆடவன் காமஞ்சான்ற ஒருத்திமேல் ஒருபுடைக் காமம் கொள்ளலாம்; பருவம் உற்ற ஒரு பெண்ணும் ஒருவர்மேல் ஒருபுடைக் காமம் கொள்ளலாம். இங்ங்ணம் பருவம் வாய்ந்தாரின் தனிநிலைக் காமம் ஒருவகைக் கைக்கிளையாம். பகையரசன் ‘நான் மணஞ் செய்து கொள்வேன் நின் மகளைத் தருக" என்று வேண்டுங்கால், அவளின் வீரப்பெற்றோர் மறுத்துரைப்பர். இது மகண்மறுத்தல் என்ற துறைப்படும். மகள் கேட்ட அரசன் போரிட்டு வீரத்தால் அவளைக் கைக்கொள்ள நினைப்பானாயின், மகள் வீட்டினர் உயிரைப்போற்றாது எதிர்த்துப் போராடுவர். இதற்கு மகட்பாற்காஞ்சி என்று துறை சொல்லப்படும். இக்காதல் வகைகளைப் புறத்திணையென வகுப்பர். ஈண்டு ஒன்று நினையல்வேண்டும். ஒருவனோ ஒருத்தியோ தானே எண்ணி நீடித்துவருந்தும் காமத்தையும் ஒருவன் இகல் கருதி வீரத்தால் கொள்ளும் காமத்தையுமே, நம்முன்னோர் புறத்திணையென்று தள்ளிவிட்டனராயின், வலிந்த பெருந்திணைக் காமம் அகத்திணை யாகுங்கொல்? பிறன் மனையாளை விரும்பும் இராவணக் காமம் (பாரதியார் ப. 192) அகத்திணையுள் ஒன்றாக எண்ணப்படுமா? வழிவழிப் புலவருலகத்தின் இப்பிழை மரபிற்குத் தலையாய காரணம் அகத்தினையாவது ஐந்தினையே எனக்கொண்டதும், கைக்கிளை பெருந்திணைகள் அகமல்ல என்று எளிதாகக் கருதிவிட்டதுமாம். அறம் பொருள் இன்பங்களில் வழுவாத அகத்திணை நன்மக்கள் கொள்ளும் காதல்நிலை எனவும், கைக்கிளை பெருந்திணைகள் குற்றேவல் செய்வார் கொள்ளும் காதல் நிலைகள் எனவும் இளம்பூரணர் எழுதுகின்றார். எழுதியபின், “குற்றேவல் செய்வார் புறப்பொருட்டு உரியராயினார் என்க. எனவே இவ்வெழுவகைத் திணையும் அகம் புறம் என இருவகையாயின” என்று முடிக்கின்றார் [1] எவ்வளவு முரண்? உணவின் வகைகள் சோறும் கறியும் துவையலு மெல்லாம். சோறு: உணவினுட் சிறந்ததுதான் என்பதற்காகச் சோறே உணவாகி விடுமா? ஏனைக்கறியும் துவையலும் நஞ்சாகிப் போமா?


  1. தொல், பொருள் 25, இளம்.
    தொல், பொருள்:54, 55, 77, நச்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/207&oldid=1395809" இலிருந்து மீள்விக்கப்பட்டது