பக்கம்:தமிழ்க் காதல்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைக் குறிக்கோள்

231


காரணம் கூற முனையாது இயல்பான ஏதுக் காட்டவேண்டும். பண்டைத் தமிழ்ச் சமுதாயத்தில் பரத்தையொழுக்கம் ஒருவகைக் குடும்ப வொழுக்கம் போலப் பரவிக் கிடந்தது; வரைவின் மகளிர் தம் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் உகந்த சூழ்நிலை சமுதாயத்தில் நிலவியிருந்தது; இடையறா இன்பப் புணர்வுக்கென்று கணவன்மார்கள் வைப்பு எடுத்துக்கொள்ளும் பழக்கம் சமுதாய மரபுபோல் ஊறி நின்றது என்ற வாழ்வியல்களை நாம் தயக்கமின்றி ஒத்துக்கொள்வோமாக தலைவன் பரத்தனாகச் சென்றபோது அவன் செயலை மனையாள் வெறுத்தாள், புலந்தாள், வருந்தினாள். எனினும் அவனைத் துார ஒதுக்கித் தள்ளினாள் அல்லள். முடிவில் அவனோடு. உடனுறைதலையே விரும்பினாள்; அதற்கு மாறாக யாதும் நினையாள். “மாற்றா உள்ள வாழ்க்கையேன்” என்று கண்ணகி அறையும் இல்லறக் கொள்கை எல்லாத் தமிழ் நங்கையர்க்கும் ஒக்கும். பெண் ஒராண் மணமே உடையளாதலின், பிற சிந்தனை அவள் நெஞ்சத்துப் பிறப்பதில்லை. எந்நிலைக் கணவனையும் நன்னிலைக் கணவனாகக் கொண்டொழுகுவதே மனைவியின் அதிகாரக் கொள்கை ஒத்துப் போகும் பெண் குணத்தாலும், பரத்தமைக்குச் சமுதாயத்தில் பேரெதிர்ப்பு இன்மையாலும், பலர்தம் இல்லறவாழ்க்கை பிளவின்றிப் பிரிவின்றி இயங்கிற்று என அறிவோமாக.

ஐந்திணைப் பரத்தை

தொல்காப்பியமும் மருதச் செய்யுட்களும் கூறும் பரத்தை எத்தகையள்? வீதிவாய்த் திரியும் கீழ்மகள் அல்லள் பரத்தைக் குலத்தவளேனும் இல்லறத்தின் பகைத்தியல்லள். சிலப்பதிகாரத்தின் மாதவிபோன்று ஆடலும் பாடலும் சான்றவள், கலை பயின்றவள், பெரும்பாலான குடும்பப் பண்பு உடையவள். வள்ளுவர் கடியக் கூறும் பொருட்பெண்டு அல்லள். தலைவனது இளம் புதல்வன் தேரோடு தெருவில் தனித்துத் திரியக் கண்டனள் ஒரு சிறு பரத்தை. அவனை மார்போடு எடுத்தனைத்துக் கொண்டனள். தன் குழந்தையென மெய்தீண்டி இன்புற்றனள். இதனைப் பார்த்துவிட்டாள் தலைவி.விரைந்தோடி வந்து பரத்தை நங்கையைப் பார்த்து, “ஏன் இக்கலக்கம்? இம்மகனுக்கு நீயும் தாய்தான் என்று நகை படவும் இகழ்படவும் மொழிந்தாள். அப்போது அப்பரத்தையின் குணம் என்ன?

களவுடம் படுநரிற் கவிழ்ந்துநிலங் கிளையா
நாணி நின்றோள் நிலைகண்டு யானும்
பேணினேன் அல்லனோ மகிழ்ந (அகம். 16)

பெருநாணுடையளாகத் தலைகவிழ்ந்தாள் எனவும், அது கண்டு அவள்பால் தலைவிக்கும் நன்மதிப்பு உண்டாயிற்று எனவும் காண்கின்றோம். தலைவன் பெரும் காமவேட்கையனாய் வண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/244&oldid=1400349" இலிருந்து மீள்விக்கப்பட்டது