பக்கம்:தமிழ்க் காதல்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

தமிழ்க் காதல்


போல் இடமாறிச் செல்லும்போது, அப்பிரிவு பொறாது பரத்தையும் தலைவிபோல் பேதுறுவாள், பிணங்குவாள், நுதல் பசப்பாள், ஆற்றியிருப்பது தன் கடன் என்று உணர்வாள் (அகம், 374).

தெறலருங் கடவுள் முன்னர்த் தேற்றி
மெல்லிறை முன்கை பற்றிய சொல்லிறந்து
ஆர்வ நெஞ்சம் தலைத்தலை சிறப்பதின்
மார்புதரு கல்லாய் பிறன் ஆயினையே (அகம். 366)

எக்கர் நண்ணிய எம்மூர் வியன்துறை
நேரிறை முன்கை பற்றிச்
சூரர மகளிரொ டுற்ற சூளே (குறுந் 53)

இரண்டாம் பகுதி தலைவி கூற்று. நின்னை ஒரு ஞான்றும் பிரியேன் என்று தலைவியின் முன்கையைப் பிடித்துக் கடற்றெய்வத்தின் முன் உறுதிச் சூள் செய்தான் தலைவன்; இங்ங்ணம் ஒரு பரத்தைக்கும் செய்தான். செய்யும் வழக்கம் உண்டு என்று முதற்பகுதியால் அறியலாம். தலைவியை வரைந்து கொள்ளுதல் போலப் பரத்தைக் குலத்தாளையும் வரைந்து கொள்ளும் முறை உண்டு. அதனால் தலைவிபோல் வரைவுப் பரத்தையும் உரிமை பெறுகின்றாள்.

கலிமா கடைஇ வந்தெஞ் சேரித்
தாருங் கண்ணியும் காட்டி ஒருமைய
நெஞ்சம் கொண்டமை விடுமோ (நற். 150)

குதிரைத்தேர் ஏறி எம் சேரிக்கு வந்தான்; என் நெஞ்சம், பலர்பாற் செல்லாது தனக்கே ஒருமையாகக் கொண்டான், என்று கற்புடைமை விளம்புகின்றாள் பரத்தைக் குறுமகள், தன் ஒருமைப்போக்குத் தாய்க்குப் பிடிக்கவில்லை என்றும் அறிகின்றாள். ஐந்திணைக்கண் பாடுபெறும் பரத்தையின் பண்பு நலம் இது.

தலைவனையும் தலைவியையும் அன்னவர்தம் குழந்தையையும் மதித்து ஒழுகும் பெற்றியினள் பரத்தை என்பதனை மருதச் செய்யுட்கள் காட்டுகின்றன. இளநாகனாரின் மருதக் கவிகள் பெரும்பாலும் பரத்தையிற் பிரிவையே பொருளாகக் கொள்வன தலைவனது தண்டாப் பெரும் பரத்தமைக்கு இவைகள் வகை வகையாகப் புனைவன. "தொடக்கத்துத் தாய்”, “வழி முறைத்தாய்" (கலி. 82) என்று பரத்தையர்களை அன்னை முறைப்படுத்துக் கூறுதலுண்டு, “காதல் எங்கையர்” (தொல். 1092) என்று தங்கை முறையாகத் கூறுதலும் காண்க. தாய் எனவும் தங்கை எனவும் கூறுவதற்கு ஊடல் காரணம் என்றாலும், அங்ங்னம் உறவுபட மொழிதல் சமுதாய மரபாக இருந்தது.

பூப்பின் புறப்பாடீராறு நாளும்
நீத்தகன் றுறையார் என்மனார் புலவர்
பரத்தையிற் பிரிந்த காலை யான (தொல். 1132)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/245&oldid=1400350" இலிருந்து மீள்விக்கப்பட்டது