பக்கம்:தமிழ்க் காதல்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

தமிழ்க் காதல்


கோயில்கள் ஆடுகளங்களாகவும் அமைந்தன. கி.பி. ஆறாம் நூற்றாண்டிற்குப் பின் தமிழகத்திலும் பரத்தமைக்குச் சமயங்களும் கோயில்களும் அளிசெய்தன. பல்லவர் சோழர் ஆட்சிகளில் ஊரனைய பெருங்கோயில்கள் உயிரளித்தன. பதியிலார் சமயச் செல்வாக்குப் பெற்றனர். சங்க காலம் சமயகாலம் அன்று. சங்கத்தமிழர் கடவுளை அரண்மனை போற்கோயிலும் பிற ஆரவாரங்களும் புறமாக அமைக்கவில்லை. அன்று சமயவுணர்வு இருந்ததன்றிச் சமயப்பூசலும் எழுச்சியும் இயக்கமும் இல்லை. சமயம் பரப்புவதென்று தனிநிலையங்களும் நிதியும் இல்லை.அதனால் சங்க காலப் பரத்தமைக்கு மதங்களும் கோயில்களும் காரணம் ஆகா, ஆகவியலா என்பது வெளிப்படை.

சமுதாயத் தேவையே பண்டைப் பரத்தமைக்குக் காரணம். அடக்கமில்லாத ஆடவர்தம் காமப்பசிக்குப் பரத்தையர் இரையாவர்; ஆணின் பொருளும் பெண்ணின் மெய்யும் பண்டமாற்றாதலைப் பண்டைச் சமுதாயம் பார்த்துக் கொண்டிருந்தது. நாற்றுக்கு இடையே தோன்றும் களையெனக் கருதாது, வரப்பில் வளரும் பூஞ்செடிபோலப் பரத்தையர்களைக் கருதிற்று. தலைவனது பரத்தமைக்கும் ஒரெல்லையுண்டு. மனைவியைக் கைவிட்டுக் குழந்தையை மதியாது வீட்டை தினையாது சேரியே தஞ்சமெனக் கிடப்பானாயின், அத்தலைவன் இகழப்படுவான். அவனது பரத்தைப் போக்கைச் சமுதாயம் கடிய முற்படும். இல்லறம் விடாது தலைவியோடு உரிய காலத்து இன்பம் துய்த்துப் புறப்போக்கும் ஆங்காங்கு உடையவனாக இருப்பின், அவனது வாழ்க்கை சமுதாயக் கண்முன் இயல்பாகவே தோன்றும். பெரிதும் வேறுபாடாகத் தோன்றாது. விருந்தும் குழந்தையும் ஆற்றாமையும் வாயிலாக, எப்படியும் புறத்தொழுக்கத் தலை மகன் தலைவியின் சினத்தைத் தணிக்க முயல்வான்.

குன்ற இறுவரைக் கோண்மா இவர்ந்தாங்குத்
தந்தை வியன்மார்பிற் பாய்ந்தான் அறனில்லா
அன்பிலி பெற்ற மகன் . (கலி. 86)

தகப்பன்வருவதைப் பார்த்தது குழந்தை. அதற்கு என் தெரியும்? ஆர்வத்தோடு பாய்ந்தது தந்தை தோள்மேல். புலந்த தலைவியின் நெஞ்சத்தை இக்காட்சி உறுத்திற்று. அறனிலன் அன்பிலன் என்று கணவனையும், அவ்விரண்டுமிலி பெற்றவன் என்று மகனையும் தாக்கிக் கழறினாலும், அவள் சொல்லும் பெருமித வுவமையைப் பார்மின், அரிக்குட்டி மலைமேற் பாய்ந்தது போல என்று சொல்லுகையினுள், அவளின் ஈடுபாடும் அகமன அன்பும் புலவி நீக்கமும் வெளிப்படக் காணுதும். இன்பக் கழிவுக்கெனத் தலைவன் கணிகையை நாடினும், அவ்வின்பம் விளையாட்டுத் தன்மைத்து எனவும், அக் கணிகை காமக்கருவி எனவும் அவன் அறிவான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/247&oldid=1400353" இலிருந்து மீள்விக்கப்பட்டது