பக்கம்:தமிழ்க் காதல்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைக் குறிக்கோள்

235


மனைவியே தலைவி எனவும், மருங்கறாது மகப்பேறு தரும் செல்வி எனவும், தன்னைத் தட்டிக்கேட்கும் உரிமையுடையவள் எனவும் நன்கு தெரிவான்.

எமக்கே வருகதில் விருந்தே சிவப்பான்று
சிறிய முள்ளெயிறு தோன்ற
முறுவல் கொண்ட முகங்காண் கம்மே (நற். 120)

என்றபடி, தலைவியின்சினக்கண்ணுக்கு அஞ்சிக்கிடக்கும் தலைவன் விருந்தை அழைத்துச் சென்று அவள்தன் அமைதி முகத்தைக் காண எண்ணுகின்றான். “அஞ்ச வந்த உரிமை” என்று தலைவியின் இல்லறத் தலைமை பாடுவர் தொல்காப்பியர் (1091). பொறுப்பும் பொறுமையும் உடையவர்க்குத்தான் இல்லறத்தில் உரிமையும் தலைமையும் உண்டு.மிகநெருக்கிக் கேட்டால், ஆம் பிழை செய்தேன் என்று அடியில் வீழ்வான் என, ஒரு தலைவி எண்ணிப் பார்த்து ஊடல் தீர்கின்றாள். இதனால் தலைவனின் உணர்வும் தலைவியின் உயர்வும் விளங்குகின்றன.

அளவறிந்த பரத்தமை

மேற் கண்டாங்குக் கணவனும் மனைவியும் ஒத்து இணங்கி வணங்கிப் போம்போது, கணவனது பரத்தமையைச் சமுதாயம் ஒருபொருட் படுத்துவதில்லை; இல்லறத்திற்குப் பகைமை என்று கருதுவதில்லை. மாறிய நிலையில், மனைவியைத் துறந்து பரத்தையே பொருளாக ஆடவன் மதிமயங்கிய நிலையில், சமுதாயம் அன்னவனை இகழ்கின்றது, திருத்த முற்படுகின்றது. அத்தகைய நிகழ்ச்சியை-வரலாற்றைப் புறநானூற்றில் கற்கின்றோம். வள்ளல் பேகன் நல்லூர்ப்பரத்தையை நாடினான்:வடுநீங்கு சிறப்புடையதன் மனைவி கண்ணகியைத் துறந்தான், இல்லம் வந்து அவளை ஊடல் தீர்ப்பதுங் கூடச் செய்தானல்லன். “முல்லை வேலி நல்லுரரானே.” (புறம். 144) என்றபடி நல்லுரே தன் உள்ளுராகத் தங்கிவிட்டான். இதனைத்தமிழ்ச்சமுதாயம் பொறுக்கவில்லை. விருந்துக்கு வந்தவன் வீட்டை மறக்கலாமா? கபிலர் பரணர் அரிசில்கிழார் பெருங்குன்றுார் கிழார் என்ற புலவர்கள் நல்லூருக்குச் சென்று பேகனைக் கண்டனர்; மனைவியைத் துறந்திருத்தல் தகாது என்றும், உடனே தேர் ஏறிச்சென்று அவள் கண்ணிரைத் துடைப்பாய், கூந்தலை ஒப்பனை செய்வாய் என்றும் வேண்டினர். “அருளாயாகலோ கொடிதே" (புறம் 144) என்று பரணர் இடித்துரைத்தனர். "குழல் இனைவதுபோல் அழுதனள் பெரிதே' (புறம் 143) என்று கபிலர் கலங்கிக் கூறினர். இவ்வண்ணம் புலவரெல்லாம் மனைவியைக் கைவிட்டது தகாது எனப் பேகனை இடித்தும் இரந்தும் மொழிந்தனரன்றி, அவனது பரத்தை யொழுக்கத்தை நேரடியாகக் கடிந்து மொழிந்திலர் காண்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/248&oldid=1400355" இலிருந்து மீள்விக்கப்பட்டது