பக்கம்:தமிழ்க் காதல்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணைப் புலவர்கள்

285


தலைவனையும்கூட வருத்துகின்றன. இங்ங்னம் வருந்துபவர் களவொழுக்கம் உடைய தலைமக்கள் என்று அறிகின்றோம். அகமாந்தர்களைக் காதற் செவிமிக்கவராக வடிக்கும் சாத்தனார் திறம் புதுமையுடையது. -

6. இடைக்காடனார்

இப்புலவர் யாத்த அகப்பாடல் ஒன்பதும் முல்லைத் திணையன. கார்ப்பருவங் கண்டு தலைவி மெலிதல், தலைமகன் தேர்ப்பாகற்குக் கூறுதல் என்ற தொடர்புடைய இரு துறைகளையும் இயைத்துப் பாடியவர் இடைக்காடனார். முல்லைத் திணையின் காலநில இயல்புகளை நன்கு அறிந்தவர். இவர்தம் அகநானூற்றில் ஆறுபாடல்கள், கூட்டின், 104 அடிகள் கொண்டன; 85 அடிகள் முல்லையியற்கை பற்றியன. முல்லை நிலத்தவர் என்பதனை இடைக்காடனார் என்ற பெயரால் கொள்ளலாம். இவர் பாக்களில் உரிப்பொருள் நயம் குறைவேயாம். அக்குறைவிற்குப் பாட மேற்கொண் முல்லையுரிப்பொருள் காரணமாகலாம். தலைவியும் தலைவனும் காமவுணர்வை அடக்கியாண்டு ஆற்றியிருக்கும் பெற்றியை நீளப் புனைந்து பாடுதற்கில்லை. ஆறுதல் அடை வாரிடத்து ஆர்வச் சொற்களுக்கு இடமில்லை. முதலும் கருவும் உரியும் மயங்காது பாடவல்ல அகப் பண்பினர் இடைக்காடர்.

முல்லை சான்ற கற்பின்

மெல்லியற் குறுமகள் உறைவின் ஊரே (அகம் 274; நற். 142)

என்பதுபோல வந்த அடிகளும் கருத்துக்களும் நடைகளும் திரும்ப வருதலின், சுவை பெருகவில்லை. எனினும், கற்பனை கலந்த உவமைகளின் பெருக்கத்தால் இவர் பாடல்கள் இலக்கியச்சுவை தளரவில்லை.

7. இளங்கீரனார்

இவர் புறம்பாடா அகப்புலவர். 16 பாடல்கள் இவர் பெயரால் உள. ஒன்று களவிற்கும் ஏனையவெல்லாம் கற்பிற்கும் உரியன. 15 கற்பியற்பாக்களும் பாலைத்திணை மேலனவே. தலைவன் தன் நெஞ்சிற்குக் கூறியது என்ற ஒரு துறைபற்றியே இவர்தம் பெரும்பாலான செய்யுட்கள் அமைந்துள. ஆதலின் நெஞ்சிற்குப் பாடிய இளங்கீரனார் என்று இவரைப் பாராட்டுவோம். எல்லாம் ஒரு துறையாகப் பாடினும் புதுப்புது வனப்போடு யாத்திருத்தலின், இலக்கியச் சலிப்புப் தோன்றவில்லை. -

யான் இன்புற்றுத் தலைவைத்துக் கிடக்கும் காதலியின் நறுமணக் கூந்தல் நல்ல நெறிகொண்டது, மிகக் குளிர்ந்தது என்று இயற்கைப் புணர்ச்சிசெய்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/298&oldid=1394737" இலிருந்து மீள்விக்கப்பட்டது