பக்கம்:தமிழ்க் காதல்.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362

தமிழ்க் காதல்



அவன் தேமொழியைக் கேட்டும், வருக என அவனுக்கு அம்புலியை அழைத்தும் ஆறுதல் அடைய முயல்கின்றாள் இல்லறநங்கை இவ்வாறாக மருதக்கலியில் பெண்ணின் தாய்மையையும் விளங்கக் கற்கின்றோம். பரத்தைத் தலைவனுக்கும் மகப்பற்று உண்டு எனவும், அப்பற்று இல்லறப் பற்றைப் பெருக்கும் எனவும் அறிகின்றோம்.

ஊடற்கலை

இளநாகனாரின் மருதக்கலி பல்வகை மாட்சியுடையது; தலைவியின் நிறையையும் அவளது ஊடற்றிறத்தையும் காட்டுவது. சில கலிகளில் தலைவன் மெய்யாகவே பரத்தன் வேறு சில கலிகளில் பரத்தனாகத் தலைவியால் கருதப்படுபவன். மெய்ப்பரத்தமை பொய்ப்பரத்தமை என்ற இரு நிலைகளில் வைத்து மருதத்திணையைப் புனைவர் இளநாகர். ஆடவனுக்கு ஒரு மணவரம்பு இல்லை. ஆதலால்,அவ்வரம்பு உடைய தலைவி கணவனைப் பல மணத்தனாகவும் இயல்பில் கருதுவாள், அவனுக்கு முன்னே வெளிப்படையாகக் கூறுவாள்.

செய்யாத சொல்லிச் சினவுவது ஈங்கெவன்

ஐயத்தால் என்னைக் கதியாதி (கலி. 91)

என்பது ஒரு தலைவன் வேண்டுரை.

இந்த இப்பிறவிக்கு இரு மாதரைச் சிந்தையாலும் தொடேன் என்று சீதைக்கு வரங்கொடுத்தான் என்பது இராமாயணக் குறிப்பு அதனைக் கிடைத்தற்கு அரிய செவ்வரம் என்று மறவாது போற்றிப் பொதிக்கின்றாள் சீதை. இது இராமனுடைய இல்லறமாட்சியைக் காட்டுகின்றது. எனினும், இராமனிடத்து அவ்வரம் கேட்கவும் அவன் கொடுக்கவும் வேண்டிய நிலை எதனால் வந்தது? பெண்ணிடத்து அத்தகைய ஒர் வரம் கேட்கத் துணியும் சமுதாய வழக்கு உண்டா? ஏன் இல்லை? ஆடவன் மணவரம்பற்றவன் என்பது சமுதாய அமைப்பு. அதனால் கம்பரின் இராமாயணத்தில் இராமனாயினும் சீதை வரம் கேட்டாள். இரு மனைவி என்று சொல்லாது இருமாதர் என்றதனால், பரத்தை வழக்கியலை உட்கொண்டு இராமன் வரங்கொடுத்தான் என்று அறியலாம். "பகைவர் பெருவருத்தம் அடையுமாறு போரிடேனாயின், வரைவில் மகளிரைத் தோய்ந்த இழுக்கத்திற்கு ஆளாவேன்’ என்று கற்புடைய வஞ்சினம் மொழிந்தான் சோழன் நலங்கிள்ளி (புறம், 73) இங்ங்னம் கூறும் வழக்கு இற் பெண்டிர்க்கு உண்டா? கூறலாமா? ஆதலின் ஆடவன் மெய்யாகப் பரத்தன் அல்லனாயினும், சமுதாயக் கண்ணுக்கும் மனைவியின் உள்ளத்துக்கும் பரத்தமைப் பாலன் ஆகத் தோன்றுகின்றான். இத் தோற்றமே சில மருதக் கலிக்கு அடிப்படையாகும்.

புறத்துப்போய் வந்த கணவன் வாழ்க்கைக்கு உதவும் முனிவர்களாகிய கடவுளரிடம் தங்கி வந்தேன் என்று சொல்லினான். நெட்டிருங் கூந்தல் உடைய கடவுளா? என்று நகையாடிப் புலந்தாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/375&oldid=1394851" இலிருந்து மீள்விக்கப்பட்டது