பக்கம்:தமிழ்க் காதல்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்திணை பாகுபாடு

43


கடல் பொங்கினும் மலை பெயரினும் விண் வீழினும் அரசு விதிப்பினும் மக்கள் எதிர்ப்பினும், வருவது வருக என்று, அச்சம் அறியார் காதல் காதல் காதல், காதல் நீங்கிற் சாதல் சாதல் சாதல் என்னும் பேராண்மை கொண்ட இளைய உள்ளங்கள் பெற்றோர்க்கு அஞ்சியோ பிற அச்சங்கொண்டோ புணர்ச்சியைத் தள்ளிப்போட எண்ணா. இடம் வாயாமையின் புணர்ச்சி நிகழாதிருக்கலாம். இடம் வாய்த்தும் தாய்துஞ்சாமை நாய்துஞ்சாமை முதலான இடையூறுகளால் புணர்ச்சி தடைப்பட்டிருக்கலாம். உள்ளம் கலந்த சின்னாட்களில் திருமணம் நடைபெற்றிருக்கலாம். களவுக்காலத்து உடற் கூட்டுறவே இல்லை என்றும், அது கூடாது என்றும் கூறுவார் கொள்கை பிழையாம்; இயற்கை யுணர்ச்சிக்கு முரணாம். கற்பு எனப்படுவது காதலர்தம் மெய்த்தொடர்புக்குப் பின் வரும் ஒழுக்கமன்று. ஒருவரை யொருவர் உள்ளத்தால் நினைத்த அப்போழுதே கற்பென்னும் திண்மை வேண்டப்படும். மெய்ப்புணர்வு பட்டபின், பெற்றோர் இசையாராயின், என்செய்வது? கற்புக் கெடுமன்றே; அன்னோர் இசைவு தெரியும்வரை உள்ளம் புணர்ந்த அளவில் வைத்துக் கொள்வோம் என்ற பகுத்தறிவு உண்மைக் கற்புத்திறமாமோ? "உள்ளத்தான் வேட்கை செல்லினும் மெய்யுற்றாராயிற்று” என அறுதியிட்டுரைப்பர் இறையனாரகப் பொருள் உரையாசிரியர். ஆதலின் கற்புக் கருதி, களவில் மெய்யுறார் என்பது அறமாகாது. களவுக் காலத்து மெய்யின்பம் துய்த்தமை பற்றிய அகப்பாடல்கள் பலவுள. மெய்யுறும் செய்கை இன்றாயின், இரவுக்குறி முதலான எத்துணையோ துறைகள் சிறந்த பயனிலவாய் ஒழியுங்காண். அயத்துவளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன நகைப்பொலிந் திலங்கும் எயிறுகெழு துவர்வாய் ஆகத் தரும்பிய முலையள் பணைத்தோள் மாத்தாட் குவளை மலர்பிணைத் தன்ன மாயிதழ் மழைக்கண் மாஅ யோளொடு . பேயும் அறியா மறையமை புணர்ச்சி (அகம். 62) தலைவன் முதற்புணர்ச்சியை மீண்டும் நினையும் பாட்டு இது. மாநிறத் தலைவியின் செவ்விதழ் சுவைத்து, அரும்பிய மார்பையும் அகன்ற தோளையும் தழுவி நுகர்ந்த மறைத்தற்கரிய முதற்கூட்டுறவை நினைவு கொள்கின்றான். பேயும் நடமாட்டம் ஒடுங்கித் துரங்கும் நள்ளிரவில் துய்த்த களவுப் புணர்ச்சி என்று பெருமிதங் கொள்கின்றான். உள்ளப் புணர்ச்சிக்கு மறைவிடம் வேண்டிய தில்லை. பேயும் அறியா நடுயாமம் வேண்டியதில்லை. ஆதலின் பரணர் இப்பாட்டில் களவுக் காதலரின் மெய்ம்முயக்கத்தைக் கூறு கிறார் என்பது வெளிப்படை முன்பின் யாதொரு உறவும் முகவறிவும் இல்லாதார் உள்ளம் அன்புற்று உடல் இன்புற்ற காட்சியை ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்க்_காதல்.pdf/57&oldid=1237180" இலிருந்து மீள்விக்கப்பட்டது