உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்த் திருமண முறை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19



9. மங்கல நாண் வழிபாடு

பொன் தாலியில் மஞ்சள் பூசிக் குங்குமம் இட்டு இருமுழ நீளமுள்ள மஞ்சள் பூசிய நாணில் அப் பொன் தாலியைக் கோத்து இரு புறமும் முடியிட்டுத் தட்டில் வைத்து, பூவெற்றிலை பாக்கு தேங்காய் பழம் மஞ்சள் இவற்றையும் வைத்துக் குழுமி யுள்ள சான்றோர் வாழ்த்துக்கூறிக் கைகளால் தொடும் வண்ணம் காண்பித்து வருதல் வேண்டும்.

மணமகன் மணமகளுக்கு வடக்குப் பக்கத்தில் அமர்தல். மணமகள் வலப்பக்கமும் மணமகன் இடப் பக்கமும் அமர்தல் வேண்டும். அப்பொழுது ஆசிரியர் பின்வரும் பாடலை ஓத. மங்கல நாண் வழிபாடு நடைபெறும்.

மன்றில்மணி விளக்கு எனலாம் மருவுமுக நகைபோற்றி
ஒன்றியமங் கலநாணின் ஒளிபோற்றி உலகும்பர்
சென்றுதொழ அருள் சுரக்கும் சிவகாம சுந்தரிதன்
நின்றதிரு நிலை போற்றி நிலவுதிரு வடிபோற்றி.


10.மணமக்கள் உறுதிமொழி

மணமகன் உறுதிமொழி கூறுதல்

பெருமதிப்பிற்குரிய பெரியோர்களே ! பேரன்புகெழுமிய உறவினர்களே ! உங்கள் அனைவர்க்கும் அன்பு கனிந்த வணக்கம். வாழ்விலோர் திருநாளாகிய இந்நன்னாளில் உங்கள் முன்னிலையில் இப்பெண்ணின் நல்லாளை என் வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக்கொள்ள மட்டற்ற மகிழ்ச்சியுடன் இசைகின்றேன். அன்பில் மலர்கின்ற இல்வாழ்க்கையில் இன்பத்திலும் துன்பத்திலும் இணைபிரியாது வான்புகழ் வள்ளுவர் வகுத்த தெள்ளு தமிழ் நெறியில் நின்று வாழ்வேன் என்று உறுதி கூறுகின்றேன். என் துணைவிக்கு இல்லற வாழ்வில் அளிக்க வேண்டிய உரிமைகளை அளித்து அன்புடன் வாழ்வேன். ‘காதலர் இருவர் கருத்து ஒருமித்து ஆதரவு பட்டதே இன்பம்’ என்ற ஆன்றோர் மொழியை நினைவிற் கொண்டு என் வாழ்க்கைத் துணைவியுடன் ஒற்றுமை-