பக்கம்:தமிழ்த் திருமண முறை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

12. உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.

இம் மங்கையோடு எமக்குள்ள தொடர்பு உடம்பிற்கும், உயிர்க்கும் உள்ள தொடர்புகள் எப்படியோ அப்படியாகும்.

உடம்பும் உயிரும் வேற்றுமையில்லாமல் கலந்திருத்தல் போலவும், இன்ப துன்பங்களைச்சேர்ந்து அனுபவித்தல் போலவும் நாங்கள் இருவரும் வேற்றுமையில்லாமல் இன்ப துன்பங்களைச் சேர்ந்து அனுபவிக்கக்கூடிய அவ்வளவு நெருங்கிய தொடர்பு உடையவரானோம் என்பதாம்.

13. கருமணியில் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்.

என் கண்ணின் கருமணியிலுள்ள பாவையே என்னால் விரும்பப்படுகின்ற அழகிய நெற்றியை யுடைய இவள் தங்கி இருப்பதற்கு வேறு இடம் இல்லை. ஆகையால் நீ தங்கி யிருக்கும் அவ்விடத்தைவிட்டு வெளியே வருவாயாக.

14. எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட விடத்து.

மை தீட்டப்படும்போது மை தீட்டும் கோலைக் கண் உணராதது போலக் கணவனைக் கண்டபோது அவரைக் காணாதபோது முனைத்திருந்த குற்றங்களுள் ஒன்றையும் நான் காணமாட்டேன்

15. காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.

என் கணவரை யான் காணும்போது குற்றமானவை ஒன்றையும் நான் அறியேன் ; அவரைக் காணாதபோது குற்றமல்லாதவற்றை அறியவே மாட்டேன் (அவர் குற்றத்தையே காண்பேன்.)

16. மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.

காம இன்பம் மலரைக் காட்டிலும் மென்மையுடையதாக இருக்கும். அங்ஙனம் அது மென்மை யுடையதாய் இருத்தலை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர்கள் உலகத்திற் சிலரே ஆவர்.