தற்போது தமிழ்நாடு பல துறைகளில் மறுமலர்ச்சி அடைந்து வருகிறது. பற்பல துறைகளில் சீர்திருத்தம் முகிழ்த்து வருகிறது. அறிவிலே புரட்சி, வாழ்க்கையிலே புரட்சி ஏற்பட்டு வருகிறது. இந்நிலை மேன்மேல் வளர வேண்டும். இத்தகைய புரட்சிகளில் ஒன்றுதான் இன்று நடைபெறும் தமிழ்த் திருமணம். தற்காலத்தே பேரறிஞர் அண்ணா அவர்களின் அரிய முயற்சியினால் இத்தகைய திருமணங்கள் சட்டப்படி ஏற்கத்தக்கவை என்ற நிலை ஏற் பட்டிருப்பது தமிழர்களின் பெருமிதத்துக்குரியது.
சிவமுத்தும் தமிழர் திருமணமும்
இத் திருமணம் தமிழ் நாட்டிற்குப் புதுவதன்று. பழந் தமிழர் மேற்கொண்டு வாழ்ந்த மணமுறையில் மக்கள் மனநிலைக்கு ஏற்பச் சிற்சில மாறுதல்களை அமைத்து அறிவுடைப் பெருமக்கள் பலர் கூடி ஆய்ந்தமைத்த தாகும். இம் முறையில் எண்ணற்ற தமிழ்த் திருமணங்களைச் செய்து வைத்துத் தமிழ் உணர்வு பரப்பி வந்தவர் நம் பெரும் புலவர் மயிலை சிவமுத்து அவர்கள். இந்நெறி வளர அவர் ஆற்றிய தியாகங்கள் அளவிலடங்காதன.
ஏன் சீர்திருத்தம் வேண்டும்?
மணம் என்பதற்குக் கூடுதல் என்பது பொருள். அன்பால் பிணைக்கப்பட்ட இருவர் உள்ளங்கள் ஒன்று கூடுவதையே மணம் என்று கொண்டோம். பண்டைக் காலத்தில் வாழ்ந்த தமிழ் மகனும் தமிழ் மகளும் ஒருவரை ஒருவர் நேரிற்கண்டு பழகி மன ஒற்றுமை உடையவரான பின்பே அவர்தம் பெற்றோர்கள் அவர்க்குத் திருமணம்