பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

தமிழ் நாடும் மொழியும்


ததால், முகமதிய ஆதிக்கத்தினை அழிக்க கி. பி. 1336-இல் எழுந்த விசய நகரப் பேரரசை நிறுவிய அரிகரன், புக்கன் என்ற இரு சகோதரரில், புக்கராயனின் மகனான கம்பணன் காஞ்சியையும், மதுரையையும் கைப்பற்றி, முகமதிய மன்ன னைக் கொன்று வீழ்த்தி, தமிழ் நாட்டின் பெரும்பகுதியைத் தன் தந்தையின் குடைக்கீழ் கொண்டுவந்தான். இவ் வெற்றியினைக் கம்பணனின் மனைவி கங்காதேவி எழுதிய “மதுரா விசயம்” என்னும் நூல் நன்கு எடுத்தியம்புகின்றது. இதே போன்று கி. பி. 1280-இல் விசய நகர மன்னனாய் விளங்கிய இரண்டாம் அரிகரன் தன் மகன் விருப்பாக்சனை தமிழ் நாட்டிற்கு அனுப்பினான். இவன் தொண்டை மண்டலத்திலும், சோழ பாண்டிய மண்டலங்களிலும், கொங்குநாட்டிலும், ஈழ நாட்டிலும் வெற்றிகள் பல அடைந்தான். இதன் பின்னர் இரண்டாம் தேவராயன் காலத்தில் விசய நகரப் பேரரசின் ஆதிக்கம் தமிழ்நாட்டில் உச்ச நிலையிலிருந்தது, ஆனால் இவனுக்குப் பிறகு கிருட்டிணதேவராயன் அரசனாகும் வரை விசய நகர மன்னர் செல்வாக்குத் தமிழ்நாட்டில் குறைந்தது. விசய நகரப் பேரரசனாகிய கிருட்டிணதேவ ராயன்காலத்தில் தமிழ்நாடு முழுவதும் அவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. நேரடியாக அவன் தமிழ்நாட்டை ஆளாவிடினும், நாயக்கர், தனது அதிகாரிகள் இவர்களது உதவியினால் நல்ல முறையில் தமிழ் நாட்டை ஆண்டான்.

மதுரை நாயக்கர்கள்

தமிழக வரலாற்றிலே தமக்கெனத் தனியிடம் கொண்டவர்கள் நாயக்கர்கள். அவர்கள் ஆட்சியிலே தமிழகம் பற்பல சிற்பக் கலை பொதிந்த கோவில்களைக் கண்டது. நல்லதொரு ஆட்சி தமிழகத்திலே நடைபெற்றது. தமிழகம் அவர்கள் ஆட்சியினால் அடைந்த நன்மைகள் பலவாகும்.