பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/208

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.5. தமிழ் மொழியும் வடமொழியும்


ஃது ஒரு காலம்; எது? தமிழும் வடமொழியும் ஒன்று; அது மட்டுமல்ல; தமிழே வட மொழித்தாயிடமிருந்து தோன்றிய ஒரு மொழி என்று எண்ணிவந்த காலமது. மேலும் அக்காலத்திலே வாழ்ந்த தமிழறிஞர்களும் வட மொழி வாணரும் வட மொழியின் துணையின்றித் தமிழ் வாழவே முடியாது என்று உறுதியாக நம்பிவந்தனர். இந்தக் கொள்கைக்கு முதன்முதல் சாவுமணியடித்தவர் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த பேரறிஞர் கால்டுவெல் என்பவராவர். இவர் வெறுமனே தம் எதிர்ப்புக் கொள்கையைக் கூறவில்லை. வடமொழி, தமிழ்மொழி, பிற திராவிடமொழிகள் திராவிட - ஆரிய மொழிகள் ஆகிய பல மொழிகளையும் பல ஆண்டுகளாக நன்கு ஆய்ந்தாய்ந்து இறுதியிலேதான் தமிழ் வேறு; வடமொழி வேறு; வடமொழியின் துணையின்றியே தமிழ் செழுமையோடு விளங்க முடியும் என்று நிறுவினார். ஆணால் இவர்க்கு முன்னரும் பின்னரும், தமிழ் வடமொழியினின்றும் வ ந் த து என்பவர்கள் வெறும் போலிக் காரண்ங்களையே தங்கள் கூற்றுக்குச் சான்றாகக் காட்டிச் சென்றனர்.

வடமொழிக்கும் தமிழுக்கும் உள்ள வேற்றுமைகளை விளக்கக் கால்டுவெல் பெருமகனார் பதின்மூன்று காரணங்களை எடுத்துக் காட்டியுள்ளார். ஆனால் இன்னும் ஆய்ந்தால் மேலும் பல காரணங்கள் வெளிப்படல் உறுதி. கால்டுவெல் மட்டுமின்றிப் பரிதிமாற்கலைஞரும், சிவஞான முனிவரும் தமிழுக்கும் வடமொழிக்கும் இடையே உள்ள வேறுபாடுகளிற் சிலவற்றை எடுத்துக்காட்டியுள்ளனர். இனிக் கால்டுவெல் காட்டும் வேற்றுமைகளிற் சில காண்போம்.