பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

தமிழ்நாடும் மொழியும்


தமிழ் முதலிய திராவிட மொழிகளில் ஆண்பால் உண்டு; பெண்பால் உண்டு. ஆனல் வடமொழியிலோ இந்த இரண்டோடு அலிப்பால் என்றதொரு புதிய பால் வகுப்பும் உண்டு. மேலும் மற்ருெரு பெரிய வேற்றுமை தமிழுக்கும் வடமொழிக்கும் இடையேயுண்டு. அஃது எது? தமிழில் பால் வகுப்புக்கு அடிப்படையாக இலங்குவது. பொருள்; வடமொழியிலோ சொல்லமைப்பைப் பொறுத்தே பால் வேறுபாடு கற்பிக்கப்படுகிறது.

எடுத்துக்காட்டு :

மனைவி என்ற பொருளிலேயே தாரம்' என்ற சொல்லும் களத்திரம் என்ற சொல்லும் வழங்குகின்றன. ஆனால் தாரம் என்ற சொல் ஆண்பால் எனவும், களத்திரம் என்ற சொல் பெண்பால் எனவும் சொல்லப்படுகின்றன.

மற்ருெரு வேற்றுமையாவது :- வடமொழியிலே ஒருமைக்கு ஒரு விதமான வேற்றுமை யுருபு: பன்மைக்கு மற்றொருவிதமான வேற்றுமை யுருபு. தமிழிலோ அவ்வழக்குப் பெரும்பாலும் இல்லை.

செங்குட்டுவன் வடவனை வென்றான்
செங்குட்டுவன் வடவர்களை வென்றான்

இங்கே " ஐ ” என்ற வேற்றுமை உருபு ஒன்றே ஒருமைக்கும் பன்மைக்கும் வந்துள்ளது. இவ்வாறு வருவது வடமொழியில் இல்லை.

பிறிதொரு வேறுபாடாவது :- வடமொழியிலே வேற்றுமை யுருபுகள் முதலியன சொல்லுக்கு முன்னே வரும்; தமிழிலோ பின்னே வரும். "

உ-ம்: சில தமிழ் ஆசிரியர்கள் வடமொழிக்குப் பெரிதும் ஆதரவு நல்குகின்றனர்.