82
தமிழ் நாடும் மொழியும்
தனர். மேலும் மாமல்லன் காலத்தில் கோவிற் சுவர்களில் பலவகை மிருகங்கள், பூக்கள், கொடிகள் செதுக்கப்பட்டன. எனவே அவை கோவிற்சுவரையே மறக்கச் செய்தன. மாமல்லபுரத்திலுள்ள பாண்டவர் இரதங்கள் நரசிம்மன் அமைத்தவையே. அர்ச்சுனன் தவம், இடையன் பால் கறத்தல் ஆகிய சிற்பங்கள் கண்ணையும், கருத்தையும் கவர்ந்துவிடும் தகுதியுடையன. தவம் செய்யும் பூனை, அதன் அருகில் அச்சம் ஏதுமின்றி இருக்கும் சுண்டெலிகள் ஆகியன அமைந்த சிற்பம் பெரிதும் கலை நுணுக்கம் வாய்க்கப்பெற்று மாமல்லனின் கலை விருப்பத்தையும் சிற்பியின் நுண்கலைத்திறனையும் உலகம் உள்ளளவும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
பல்லவர் துறைமுகமாகிய கடல்மல்லை நரசிம்மவர்மன் காலத்தில் பன்மடங்கு விரிவடைந்தது. தனது சிறப்புப் பெயராகிய மாமல்லன் என்பதை நரசிம்மவர்மன் இதற்குச் சூட்டவே அன்றுமுதல் கடல்மல்லை மாமல்லபுரமாயிற்று. இன்று இது மகாபலிபுரம் என்று வழங்கப்படுகிறது. இங்கு தமிழகத்தின் சிற்பக் கலையின் சீரிய பண்புகள் அனைத்தையும் காணலாம். திருமங்கை மன்னரால் பாராட்டப்பெற்றுள்ள இப்பதி செங்கற்பட்டிற்குக் கிழக்கே இருபது கல் தொலைவில் உள்ளது.
கடல் மல்லையில் நாம் காணும் முதல் மண்டபம் மகிடாசுரமர்த்தனியின் குகைக்கோவிலாகும். இம் மண்டபத்தின் முற்புறத்தில் ஆறு தூண்கள் உள்ளன. இதன் உட்பாகம் கற்பாறையைக் குடைந்ததாகிய ஒரு கூடமாக விளங்குகிறது. இதனது நடுச்சுவர் மையத்தில் சிவன் உமையுடன் அமர்ந்திருக்கும் காட்சியைக் கண்டு களிக்கலாம். நான்கு கரங்களோடு நந்தியின்மீது பதித்திருக்கின்ற இணையடியோடு இறைவன் விளங்குகின்றான். அயனும் அரியும் கூப்பிய கைய