பக்கம்:தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தமிழ் மன்னரும்
சாதிப் பிரிவினைகளும்

சோழ மன்னர்கள் காலத்தில் இரண்டு வகையான சாதிப் பிரிவினைகளைப் பற்றிக் கல்வெட்டுகள் மூலம் நாம் அறிந்து கொள்கிறோம். முதல் ராசராசன் காலத்தில் வலங்கை பழம் படைகளிலார், பெருந்தனத்து வலங்கைப் பெரும் படைகள், அழகிய சோழத் தெரிந்த வலங்கை வேளைகாரப் படைகள், ராஜராஜன் தெரிந்த வலங்கை வேளைக்காரர்' என்ற படைப் பிரிவுகளின் பெயர்கள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.

ராசராசன் காலத்திற்குப் பிற்பட்ட கல்வெட்டுகளில், இடங்கை தொண்ணுாற்றாறு, இடங்கைத் தொண்ணுற்று சமயத் தொடகை என்ற பெயர்கள் காணப்படுகின்றன. பிற் காலச் சோழர்கள் சிலரது கல்வெட்டுக்களில், மூன்றுகை மகா சேனை, மூன்றுகை திருவேளைக்காரர் என்ற பெயர்கள் காணப்படுகின்றன. இம்மூன்று பிரிவினரும் சாதி அடிப்படை யில் அமைந்த பிரிவினரா, அன்றி வர்க்க அமைப்பில் எழுந்த பிரிவினரா என்ற வினா எழுகிறது. இவ்வினாவிற்கு விடை கூற இம்மூன்று பிரிவுகளிலும் எந்தெந்தச் சாதியினர் அடங்கி யிருந்தனர், அவர்கள் எத்தொழில்களைச் செய்து வந்தனர் என்பதையும் அவர்களிடையே நிலவிய உறவையும் அறிந்து கொள்வது அவசியமாகும்.

வலங்கைப் பிரிவில் நிலம் உடையாரும் உழவர்களும் வண்ணான், நாவிதன் போன்ற தொழிலாளிகளும் பனைமர மேறும் தொழிலாளிகளும் வன்னியர் போன்ற தொழிலாளி களும் இடையர் போன்ற கால்நடை பராமரிப்பவரும் அடங்கி யிருந்தனர். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் தெலுங்கும் கன்னடமும் வழங்கும் நாடுகளிலும் இப்பிரிவினர் உள்ளனர். இப்பிரிவிலுள்ள சாதிகளில் சிலவற்றை ஜார்ஜ் கோல்மன் என்னும் நீதிபதி 1809ஆம் ஆண்டில் தாமளித்த தீர்ப்பொன்றில் குறிப்பிடுகிறார். அவையாவன: குசவன், மேளக்காரன், சாணான், அம்பட்டன், கன்னான், இடையன், வெள்ளாளன், பறையன், குறவன், ஒட்டன், இருளன், வேடன், வேட்டுவன் முதலியன.