உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும் m வழங்கப்பட்டது. சான்றாக, மலையும் மலைசார்ந்த பகுதிகளும் என்பதில் இன்றைய பழநிமலை, நீலகிரி, மேற்குத் தொடர்ச்சி மலைகள் அடங்கும். இவற்றின் தலைவன் பொருப்பன், வெற்பன், சிலம்பன் என்ற பெயர்களால் வழங்கப்பட்டான்.இவனுடைய மனைவி கொடிச்சி அல்லது குறத்தி என்ற பெயரால் வழங்கப்பட்டாள். பொருப்பனைத் தலைவனாகக் கொண்ட குறிஞ்சி இனத்தவர் இரு பெரும் பிரிவுகளாக வாழ்ந்தனர்- ஒரு பிரிவினர் கணவர் என்றும் மற்றொரு பிரிவினர் குறவர் என்றும் பெயர் பெற்றனர். இரு பிரிவினரின் மனைவிமார்களும் குறத்தியர் எனப்பட்டனர். நீர்வளம் நிறைந்த தஞ்சைப் பகுதியில், குடியிருப்பின் தலைவனுக்கு மகிழ்நன் அல்லது ஊரன் என்றும் அவன் துணைவிக்கு மனைவி அல்லது கிழத்தி என்றும் பெயர்கள் வழங்கிவந்தன. வேளாண்மைச் செழிப்பு நிறைந்த செல்வக் குடியினரின் தலைவர் தலைவியர் உழவர். உழத்தியர், கடையர்-கடைச்சியர் எனப்பட்டனர். கடலோரப் பகுதிகளில், குடியிருப்பின் தலைவன் சேர்ப்பன் அல்லது புலம்பன் ஆவான். அவன் மனைவி, பரத்தி அல்லது நுழைச்சி. . பண்பாட்டுச் சூழல் புலவர் போற்றிய ஐவகை நிலம் என்ற பாகுபாடு இப்போது இல்லை. பொருளாதார மாறுதல்களாலும் அரசியல் விளைவுகளாலும் சமுதாயம் உருத் தெரியாமல் சிதைந்து அதன் பழைய இயல்புகளை இழந்து வருகிறது. தெருக்கள், வீடுகள், சமுதாய மன்றங்கள் ஆகியவற்றின் அமைப்பு தமிழ் நாடெங்கும் ஒரே மாதிரியாக இருந்தது. ஒவ்வொரு கிராமமும் கோயிலைச் சுற்றியோ கோயில் அருகேயோ அமைந் திருந்தது. கோயில் குருக்களாகப் பெரும்பாலும் பிராமணரே பணி புரிந்ததால் அவர்களுடைய வீடுகள் உள்ள அக்கிரகாரம் என்ற பகுதி, கோயிலுக்கு அருகே இருந்தது. அவற்றுக்கு அருகே பிள்ளைமார், முதலியார்கள் ஆகியோரின் வீடுகள் இருந்தன. ஊர் நடுவே அமைந்த மேற்கண்ட வீதிகளை அடுத்து, வணிகர்கள் குடியிருந்தார்கள். தீண்டப்படாத மக்கள் ஊருக்கு வெளியே அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பகுதியில் வாழ்ந்தார்கள். மதுரை போன்ற வரலாற்றுச் சிறப்புள்ள நகர்களில்கூட மக்கள் தொழில்வாரியாக, கூட்டம் கூட்டமாக வாழ்வதைப் பார்க்கிறோம்.