பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பழமொழிகள்

119


ஆனாங் கோத்திரத்துக்கு ஏனாந் தர்ப்பயாமி. 2730

(துரத்து உறவுக் குறிப்பு.)

ஆனால் அச்சிலே வார்; ஆகா விட்டால் மிடாவிலே வார்.

ஆனால் ஆதி வாரம்; ஆகாவிட்டால் சோம வாரம்.

(ஆதித்த வாரம்.)

ஆனால் தெரியாதா? அழுகைக் குரல் கேட்காதா?

ஆனால் பிரம்ம ரிஷி; ஆகாவிட்டால் ரோம ரிஷி.

ஆனால் விட்டு அடுப்பு எரியும்; போனால் விட்டுப் புத்தி வரும். 2735

ஆனான ஆளெல்லாம் தானானம் போடுகிறபோது, கோணல் கொம்பு மாடு கொம்பைக் கொம்பை அலைக்கிறது.

ஆனானப்பட்ட சாமி எல்லாம் ஆடிக் காற்றில் பறக்குது; அநுமந்தப் பெருமாளுக்குத் தெப்பத் திருநாளாம்.

ஆனானப் பட்டவர்கள் எல்லாம் தானானம் அடிக்கறச்சே அழுகற் பூசணிக்காய் தெப்பம் போடுகிறதே!

ஆனி அடி எடார்; கூனி குடி புகார்.

(அடிஇடாதே, குடி போகாதே, கூனி-பங்குனி மாதம்.)

ஆனி அடி வைத்தாலும் கூனி குடி புகாதே. 2740

(அடியிடாதே.)

ஆனி அடை சாரல், ஆவணி முச்சாரல், ஆடி அதி சாரல்.

ஆனி அரணை வால் பட்ட கரும்பு, ஆனை வால் ஒத்தது.

ஆனி அரை ஆறு; ஆவணி முழு ஆறு.

ஆனி அறவட்டை, போடி உங்கள் ஆத்தாள் வீட்டுக்கு.

ஆனி ஆவணியில் கிழக்கு வில் பூண்டால் பஞ்சம் உண்டு. 2745

ஆனி ஆனை வால் ஒத்த கரும்பு.

ஆனித் தூக்கம்.

ஆனி மாதம் போடுகிற பூசணியும் ஐயைந்து வயசிற் பிறந்த பிள்ளையும் ஆபத்துக்கு உதவும்.

ஆனி முற்சாரல்; ஆடி அடைசாரல்.

(திருக்குற்றாலத்தில்.)

ஆனியில் அடி கோலாதே; கூனியில் குடி போகாதே. 2750

ஆனியும் கூனியும் ஆகா.