பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210

தமிழ்ப் பழமொழிகள்


எச்சில் இலை நாய்க்கும் பிறந்த நாள் கொண்டாட்டமா?

எச்சில் இலை நாயானாலும் எசமான் விசுவாசம் உண்டு. 4885

எச்சில் இலையை எடுக்கச் சொன்னார்களா? எத்தனை பேர் என்று எண்ணச் சொன்னார்களா?

(எச்சிலிலைக் கணக்குக் கேட்கச் சொன்னார்களா?)

எச்சில் கையால் காக்கை ஓட்டாதவன் என்ன சாமி? என்ன பூஜை?

எச்சில் கையால் காக்கை ஓட்டமாட்டான்.

(கையாலும்.)

எச்சில் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை இடுவானா?

(பிச்சை எடுப்பானா?)

எச்சில் தின்றாலும் வயிறு நிரம்பத் தின்னவேண்டும்; ஏச்சுக் கேட்டாலும் பொழுது விடியும்மட்டும் கேட்க வேண்டும். 4890

எச்சில் நாய்க்குக் கண்டது எல்லாம் ஆசை.

எச்சிலை எடுக்கச் சொன்னாளா? இலையை எண்ணச் சொன்னாளா?

எச்சிலைக் கழுவி உன் சுத்தத்திலே வார்.

எச்சிலைக் குடித்துத் தாகம் தீருமா?

(அடங்குமா?)

எச்சிலைத் தின்றாலும் எஜமானன் விசுவாசம் காட்டும் நாய்; பாலைக் குடித்தாலும் பகையை நினைக்கும் பூனை. 4895

எச்சிலைத் தின்று ஏப்பம் விட்டாற் போல.

எச்சிலைத் தின்று பசி தீருமா?

எசமான் கோபத்தை எருமைக் கடாவின்மேல் காண்பித்தானாம்.

எசமான் வீடு நொடித்து விட்டதென்று நாய் பட்டினியாக இருந்ததாம்.

எசமான் வெளிலே போனால் பசங்கள் எல்லாம் கும்மாளம் போடுவார்கள். 4900

எட்கிடை நெற்கிடை விட்டு எழுது.

எட்டாக் கனியைப் பார்த்து இச்சித்து என்ன பயன்?

எட்டாத தேனுக்கு ஏறாத நொண்டி கொட்டாவி விட்ட கதை போல.

எட்டாத பழம் புளிக்கும்.

எட்டாத மரத்து இளநீர் போல ஒட்டாத பேரோடே உறவாக நிற்காதே. 4905