பக்கம்:தமிழ்மாலை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை

"பகைவர்க்குத் தாழாமல் படைகண்டு வீழாமல்

பல்லூழி வாழ்கின்ற தமிழ்”

(கலைஞர் கவிதைகள், பக்.59)

தமிழ் மொழியின் சீரிளமைத் திறம் குறித்துக் கலைஞர் அவர்கள் எழுதியுள்ள மேற்கண்ட கவிதை வரிகள் அவரின் நெஞ்சாழத்துத் தமிழுணர்வின் வீர வெளிப்பாட்டுச் சொற்கள். இருபதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் வீறுகொண்டெழுந்த திராவிட இயக்கத்தைத் தோற்றுவித்த தந்தை பெரியாரின் சிந்தனை மரபில் அரசியல் சாதனை புரிந்த மாமனிதர் பேரறிஞர் அண்ணாவின் தளபதியாகத் திகழ்பவர் தமிழக முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள். தமிழ் உணர்வின் வடிவமாகத் திகழ்பவர். பகுத்தறிவுச் சிந்தனையாளர், நாடகப் படைப்பாளி, புதினக் கலைஞர், இதழியல் வல்லுநர், புதிய கவிதை மரபிற்கு வித்திட்டவர் - எனப்பல்வேறு பெருமைகளுக்குரிய கலைஞரின் இலக்கியச் சாதனைகளுக்காக, தமிழ்ப் பல்கலைக்கழகம் மாமன்னன் இராசராசன் விருது வழங்கி அவரைச் சிறப்பித்தது.

மாமன்னன் இராசராசன் விருதாக அவருக்கு வழங்கப் பெற்ற உரூபாய் ஒரு இலட்சத்தையும் அவர் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கே திரும்ப அளித்து, தம் பெற்றோர் பெயரில் ஓர் அறக்கட்டளை நிறுவினார். “அன்னை அஞ்சுகம் - தந்தை முத்துவேலர் அறக்கட்டளை” என அழைக்கப்பெறும் இவ்வறக்கட்டளை மூலம், ஆண்டுதோறும், தமிழுணர்வினை வித்திட்டு வளர்த்த பேரறிஞர் பெருமக்களான மறைமலை அடிகள், திரு. வி. கல்யாணசுந்தரனார், நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார். கா. சுப்பிரமணியபிள்ளை, கால்டுவெல் ஆகியோர் ஆற்றிய பணிகள் குறித்து ஆய்வுரைகள் நிகழ்த்த வேண்டுமென்று விதி அமைத்தார். தமிழ் உணர்வு என்ற நெருப்பினை அணையாமல் காக்கும் பெரும்பணிகளில் ஒன்றாக, இப்பெருமக்கள் குறித்து ஆண்டுதோறும் ஆய்வுரைகள் நிகழ்த்த இவ்வாறு கலைஞர் ஏற்பாடு செய்து வைத்துள்ளார்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் நிறுவியுள்ள அன்னை அஞ்சுகம் தந்தை முத்து வேலர் அறக்கட்டளை சார்பில் நிகழ்த்தப் பெற்ற சில சொற்பொழிவுகளில், மறைமலை அடிகள் பற்றிய முதற் சொற்பொழிவே தமிழ் மாமலை என்ற பெயரில் இப்போது நூலாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்மாலை.pdf/6&oldid=687133" இலிருந்து மீள்விக்கப்பட்டது