பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



13. அகநானூறு

முன்னுரை

அகநானூற்றுப் பாடல்களின் சிறுமை பதின்மூன்று அடி: பெருமை முப்பத்தொன்று. இதற்கு நெடுந்தொகை என்றும் பெயர் உண்டு. இதனைத் தொகுப்பித்தவன் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி; தொகுத்தவன் மதுரை உப்பூரி குடி கிழான்மகன் உருத்திரசன்மன். இந்நூலில் முதல் நூற்றிருபது பாக்கள் 'களிற்றியானை நிரை' எனவும், 121 முதல் 300 வரையில் உள்ளவை 'மணிமிடை பவழம்' எனவும், இறுதி நூறு 'நித்திலக் கோவை’ என்றும் பெயர் பெற் றுள்ளன. இச் செய்திகள் இந்நூற்பாயிரத்தில் கூறப்பட்டுள்ளன.

இப்பாயிரத்தைப் பாடியவன் இடையள நாட்டு மணக் குடியான் பால்வண்ண தேவனான வில்லவதரையன். இவன் காலம் அறியுமாறில்லை. இவன், இந்நூலில் பாடியுள்ள புலவர் நூற்று நாற்பத்தைவர் எனக் கூறியுள்ளான். இங்ஙனம் இவன் கூறிய புலவர் எண்ணிக்கையே இலக்கிய வரலாறு எழுதியோர் அனைவரும் தத்தம் நூலில் குறித்துள்ளனர். புலவர் பெயர்களை எழுதிக் கணக்குப் பார்க்கும் போது அவர்கள் தொகை நூற்றைம்பத்தெட்டு ஆகிறது. மூவர் பெயர்கள் தெரியவில்லை.

1. பேரி சாத்தனார் வேறு, ஆலம்பேரி சாத்தனார் வேறு. இங்ஙனமே நக்கீரர் வேறு. மதுரை நக்கீரர் வேறு, மதுரை நக்கீரனார் வேறு கணக்காயனார் மகனார் நக்கீரனார் வேறு. இவ்வாறே மருதன் இளநாகனார் வேறு, மதுரை மருதன் இளநாகனார் வேறு. இப்படியே சீத்தலைச் சாத்தனார் வேறு, மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத் தனார் வேறு.

மதுரை ஆசிரியர் நல்லந்துவனார் வேறு, ஆசிரியர் நல்லந்துவனார் வேறு, அந்துவன் வேறு என்று பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையவர்கள் கூறுவது இங்கு நினைவு கூரத்தக்கதாகும்.- தமிழ் மொழி-இலக்கிய வரலாறு, பக். 56. அடிக்குறிப்பு.