பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248 தமிழ்மொழி-இலக்கிய வரலாறு

 தால், இங்குக் கூறப்பட்டுள்ள தலைவனைப் பாண்டியனாகக் கருதுதல் பொருத்தமாகும் "தமிழ் கெழுகூடல்" என்றும் "தமிழ் வையை" என்றும் தமிழுக்கும் கூடலுக்கும். தமிழுக்கும் வையைக்கும் தொடர்புடைமையைப் பிறநூற் பாக்களும் உணர்த்தலாலும், பாண்டியரே சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தவர் என்று களவியலுரையும் பிற நூல்களும் கூறலானும், கலித்தொகைப் பாக்களும் அவ்வுண்மையையே புலப்படுத்துகின்றன என்பது இங்கு அறியத்தகும்.
 கல்வி: கல்வி பற்றிய செய்தி மூன்று செய்யுட்களில் கூறப்பட்டுள்ளது. ஒரு தலைவன் மெய்ப்பொருள் கூறும் நூல் களைக் கூறவல்லவர்களை வழிபட்டு அப்பொருளை அறிந்தவன் போல நன்மக்களைக் கண்டால் தோன்றும் மன அடக்கம் உடையவன் (47) . ஒன்றையும் கல்லாமல் மூத்தவன் அறிவுக்கண் இல்லாத நெஞ்சம் உடையவன் (130) பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியன் தன்பால் ஒன்று பெறாமல் மனம் வருந்தும்படி, கற்றவன் விடலாகாது. அவன் தன் கைப்பொருளை அக்கல்விப் பொருளுக்குக் கைம்மாறாகக் கொடுக்க வேண்டும். தான் கற்ற கல்வியிடத்தே தவறு செய்பவனது கல்விப் பொருள் நாள்தோறும் தேயும். அவனும் தானாகத் தேய்ந்துவிடுவான் (சிறப்பிழப்பான்) [149].
 அணிகள்: இந்நூலில் மிகப்பல அணிகளின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன. இழை, முத்துவடம், கண்ணி, மேகலை, தொடி, மகரக்குழை, வரிக்குழை, கணங்குழை, தெள்ளரிச் சிலம்பு, இடபக்குறி பொறித்த தாயத்து, பவளவடம், பொன்மணி வடம், சதங்கை, வயந்தகம், வல்லிகை, புல்லிகை, கன்ன சாமரை, தெய்வ உத்தி, கண்டிகை முதலியன, பரத்தையர் அணியும் அணிகள் சில செய்யுட்களில் (95, 96, 135) கூறப்பட்டுள்ளன,
 சமயச் செய்திகள்: முக்கோல்பகவர் என்பவர் உறியிலே தங்கின. கமண்டலத்தை யுடையவர்; அரி, அயன், அரன்