பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15. பரிபாடல்

முன்னுரை

பரிபாடல் என்னும் இசைப்பாக்களால் தொகுக்கப்பெற்றமையால் இப்பாக்களின் தொகுதி பரிபாடல் எனப் பெயர் பெற்றது. இப்பாக்களுக்குப் பண்கள் வகுக்கப்பெற்றுள்ளதைக் காண, இவை சங்க காலத்தில் இசையுடன் பாடப்பட்டன என்பது தெளிவு.

இது, தொகை நிலை வகையால் பா என்று சொல்லப்படும் இலக்கணம் இன்றி - எல்லாப்பாவிற்கும் பொதுவாக நிற்றற்கு உரியதாய் இன்பப் பொருளைப் பற்றிக் கூறும், இது சிறுமை இருபத்தைந்து அடியும், பெருமை நானூறு அடியும் எல்லையாகக் கொண்டுவரும்,' என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.[1]

பரிபாடற்கண் மலையும் யாறும் ஊரும் வருணிக்கப்படும் என்று இளம்பூரணர் கூறியுள்ளார்.[2] அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப் பொருள்கள் நான்கனுள் இன்பத்தையே பொருளாகக் கொண்டு கடவுள் வாழ்த்து, மலை விளையாட்டு, புனல் விளையாட்டு முதலியவற்றில் இப்பாடல் வருமென்று பேராசிரியர் கூறியுள்ளார்.[3] தெய்வ வாழ்த்து உட்படக் காமப்பொருள் குறித்து உலகியலே பற்றிவரும் என்று நச்சினார்க்கினியர் கூறியுள்ளார்.[4]


  1. செய்யுளியல், நூற்பா 116, 155.
  2. ௸ நூற்பா, 117 உரை.
  3. ௸ 1372, 1373, 1411 உரை.
  4. தொல்காப்பியம், அகத்திணையியல், நூற்பா 53 உரை.