பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

334

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு


நூற்றுவர் கன்னர்

செங்குட்டுவன் வடநாடு சென்ற பொழுது நூற்றுவர் கன்னர் என்னும் பெயர் கொண்ட மன்னன், கங்கையாற்றைக் கடக்க உதவி புரிந்தனன் என்று சிலப்பதிகாரம் செப்புகின்றது. சாதகர்ணி என்னும் வடமொழிப் பெயரின் மொழி பெயர்ப்பே நூற்றுவர் கன்னர் என்பது. சாதகர்ணிகள் என்று அழைக்கப்பட்டவர், 'சாதவாகனர் என்ற ஆந்திரப் பேரரசரேயாவர். அவர்கள் ஏறத்தாழக் கி. மு. 235 முதல் கி. பி. 220 வரையில் நடு இந்தியாவின் பெரும்பகுதியை ஆண்டவராவர்.[1] அவருட் சிலர் காலங்களில் ஆந்திரர் ஆட்சி கங்கை வரையிற் பரவியிருந்தது. அச் சிலருள் ஒருவனான கெளதமீபுத்திர சாதகர்ணி என்ற ஆந்திரப் பேரரசன் பெரும் புகழுடன் வாழ்ந்திருந்த காலம்தான் (கி. பி. 106130) கயவாகுவின் காலத்தோடு (கி. பி. 114-186) பொருந்துகிறது. அக்காலத்தில் கங்கைக்கு வடபால் சிறு சிறு நாடுகள் அரசால் ஆளப்பட்டுவந்தன என்பதும் வரலாறு கண்ட உண்மை.

ஒரே காலத்தவர்

சிலப்பதிகார ஆசிரியரான இளங்கோவடிகள் செங்குட்டுவனுக்குத் தம்பியாவார் என்று சிலப்பதிகாரம் வரந்தரு காதை (வரி 171-183) தெளிவாகத் தெரிவிக்கின்றது. செங்குட்டுவன், இளங்கோ ஆகிய இருவர் காலத்திலும் மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் வாழ்ந்தனர் என்று சிலப் பதிகாரமே (காட்சிக் காதை) செப்புகிறது. மேலும்,

“உரைசால் அடிகள் அருள மதுரைக்
கூல வாணிகன் சாத்தன் கேட்டணன்”

என்று சிலப்பதிகாரப் பதிகமும்,


  1. 4. R. Satyanatha Aiyar, History of India, Vol. І, pp. 206–207.