பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

தமிழ் மொழி - இலக்கிய வரலாறு


சொல்லிலிருந்தே வந்திருக்க வேண்டும். அங்ஙனமாயின், தக்கணப் பகுதிக்குத் தென்பால் உள்ள திராவிட மொழிகள் ஒரு காலத்தில் வட இந்தியாவில் (ஆரியர் வந்தபோது) இருந்திருத்தல் வேண்டும் என்பது புலனாகும். எனவே, இந்தியாவில் ஆரியமொழிக்கு முற்பட்டது திராவிட மொழியாகும்.[1]

வடமொழியும் திராவிட மொழியும் நீண்ட காலம் ஒன்றோடொன்று நெருங்கி இருந்தன என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.[2]

விசிறி-தமிழ், விசனகர்ர-தெலுங்கு, வீசரி-மலையாளம், பீசணிகெ-கன்னடம்; வீஜன, வ்யஜன-வடசொற்கள். இச்சொல்லும் திராவிட மொழியினின்றும் கடன் வாங்கப்பட்டதே. இங்ஙனமே மயூரம் (மயில்), பல (பழம்), ஓடா (ஓடர் ), முக்தா (முத்தம்) என்பன.

ஆரியர் வேற்று நாட்டிலிருந்து வந்தவர். ஆதலின் அவர்கள் இந்தியாவில் கண்ட புதிய செடிகட்கும் மாங்கட்கும் வேறு பொருள் கட்கும் உரிய சொற்களைக் கடன் பெற்றிருத்தல் இயல்பே. எனவே, அவர்கள் பஞ்சாப் பகுதியில் குடியேறியதும், அங்கிருந்த திராவிடரோடு கலப்புண்டு திராவிடச் சொற்கள் பலவற்றைப் பெற்றிருத்தல் இயல்பே. ஆரியரது முதல் வேதமாகிய ரிக் வேதத்திலேயே பல திராவிடச் சொற்கள் இடம் பெற்றுள்ளன. அவை கதலி (வாழை), ஓடா (ஓடம்), முக்தா (முத்தம்), தாம்பூலா

  1. Pre-Aryan and Pre-Dravidian in India, pp 47-49.
  2. Ibid. p. 52; ‘பூஜை’ என்பது வடமொழிச் சொல்லாயினும், திராவிட மூலத்தையே கொண்டிருத்தல் வேண்டுமென்பது ஆராய்ச்சியாற் புலனாகும். -Dravidic Studies, vol. iii, p. 60.