பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு


பரத்தையிற் பிரிவு: தலைவன் பரத்தையர் இன்பத்தை நாடிப் பிரிவதைத் தோழியும் தலைவியும் கண்டிப்பர் (குறுந்தொகை 196, நற்றிணை 170), தலைவன் பாணன் முதலியோரைத் தூது விடுத்துத் தலைவியை அமைதிப்படுத்துவான் (குறுந்தொகை 106). சில சமயங்களில் தலைவி வாயில் மறுப்பாள். வாயில் பெறாத தலைமகன் தன் புதல்வனைத் தழுவிக்கொண்டு கொஞ்சிக் குலாவி வீட்டினுள் நுழைந்து படுக்கையில் படுப்பான். தலைவி அவனது குறையை மறந்து ஊடல் தணிவாள் (குறுந்தொகை 359).

தலைவன் இங்ஙனம் தலைவியின் மனம் வருந்தும்படி பல தீமைகளைச் செய்யினும், அவள் பொறுத்து அவனை ஏற்றுக் கொள்வாள். “உழவர் தம் வயலில் முளைத்த நெய்தலைப் பிடுங்கி எறிவர். ஆயினும் அது மீட்டும் அவரது வயலிலேயே பூக்கும். அதுபோல எனக்குத் தீமை செய்த நின்னிடம் அன்புடையேன் ஆயினேன்”. என்று ஒரு தலைவி தலைவனை நோக்கிக் கூறினாள் (குறுந்தொகை 309).

தலைவன் பரத்தையைப் பிரிந்து மீண்டும் வந்த பின்பு தலைவிக்கு முன்பு இருந்த ஆற்றாமை நீங்கும். அவள் அவனோடு அளவளாவி

“இம்மை மாறி மறுமை யாயினும்
நீயா கியரென் கணவனை;
யானா கியர்நின் நெஞ்சுநேர் பவளே”

(குறுந்தொகை-49)

என்று தன் மனமார்ந்த விருப்பத்தை வெளியிடுவாள். இப்பிறவியில் மட்டுமின்றி மறுபிறவியிலும் அவனே கணவனாதல் வேண்டும் என்ற தலைவியின் விருப்பம் அவர்தம் காதல் பிணிப்பை அன்றோ எடுத்துக்காட்டுகின்றது!

தலைவன் சில சமயங்களில் பரத்தையரோடு ஆற்றுநீரிலும், மணற்குன்றுகள் மீதும், பூம்பொழிலிலும் விளையாடுவான். அதுபற்றித் தலைவி கேட்கும்போது தலைவன் மலைமீதும் பொழில்மீதும் மலைச்சாரல்மீதும் ஆணையிட்டுத்-