பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்து ரிக்வேதம் இயற்றிய காலம் ஏறத்தாழக் கி. மு. இரண்டாயிரம் என்றும், பிராமணங்கள் எழுதிய காலம் கி. மு. ஆயிரம் என்றும் வரலாற்றாசிரியர் கூறுவர் வேதகால இலக்கியத்தில் தமிழ் நாடுகளைப் பற்றிய பேச்சே இல்லை. பிராமணங்களின் காலத்தில்தான் தென்னிந்தியாவில் ஆரியர் நுழைவு ஏற்படத் தொடங்கியது. அக்காலத்தில் தென்னிந்தியா மேற்கு ஆசிய நாடுகளுக்கும் எகிப்துக்கும் தந்தம். மயில், மிளகு முதலியவற்றை ஏற்றுமதி செய்து வந்தது "16

வட இந்தியாவில் கெளதம புத்தர் வாழ்ந்த காலம் கி.மு. 587-487. அவர் பெளத்த சமயத்தை வட இந்தியாவில் பரப்பினார். அவருடைய கொள்கைகளை ஏற்றுக் கொண்ட ஆண் துறவிகள் பிட்சுக்கள் என்றும், பெண் துறவி கள் பிட்சுணிகள் என்றும் பெயர் பெற்றனர். அத்துறவிகள் இருக்கவும், புத்த தருமத்தைப் பரப்பவும் நாடெங்கும் சங்கங்கள் ஏற்பட்டன. புத்தர், அவர் உபதேசித்த தருமம், அவர் ஏற்படுத்திய சங்கம் ஆகிய மூன்றும் பெளத்த மும்மணிகள் என்று கூறப்பட்டன.

சமண சமயத்தைத் தோற்றுவித்த மகாவீரர் வாழ்ந்த காலம் கி.மு. 539-467 ஆகும். அவரும் புத்தரைப் போலவே அரச மைந்தராகப் பிறந்தவர். சமண சமயக் கொள்கைகளை ஏற்றுக்கொண்ட ஆண் துறவிகள் சமண முனிவர் எனப்பட்டனர், பெண் துறவிகள் ஆரியாங்கனை கள், கந்தியார், அடிகள் , குரத்தியர் எனப்பட்டனர். சமணத் துறவிகள் கூட்டமும் சங்கம் எனப்பட்டது. சமண சமயம் இன்னா செய்யாமை என்பதை மிகுதியாக வற்புறுத்தியது, கடுந்தவத்தை வற்புறுத்தியது; உண்ணா நோன்பை மேற்கொண்டு உயிர் விடுதலையும் ஏற்றுக்கொண்டது. இதனை 'வடக்கிருத்தல்’ என்று தமிழ் நூல்கள் கூறும்.

16. R. Sathayanatha Iyar, History of India,

Vol. 1, pp. 36 - 45.