பக்கம்:தமிழ் அங்காடி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார் 99


இனிது இருத்தி

தம்பி வீடணா! நீ போரில் என்னோடு வரவேண்டிய தில்லை. நமது இலங்கை பாதுகாவலான பரந்த இடத்தை உடையது. நீ இங்கேயே இன்பமாக இருப்பாயாக. உனக்கு ஏதாவது தீங்கு நேரும் என அஞ்சற்க - அஞ்சற்க எனக் கிண்டலாகக் கூறி, அருகிருந்தவரை நோக்கிக் கை கொட்டி இடிச் சிரிப்பு சிரித்தான்:

“வெஞ்சினங் தரு போரில் என்னுடன் எழவேண்டா
இஞ்சி மாநகர் இடமு டைத்து ஈண்டு இனிதிருத்தி அஞ்சல் அஞ்சல் என்று அயலிருந்தவர் முகம் நோக்கி நஞ்சின் வெய்யவன் கையெறிந்து உருமென நக்கான்"
(117)

இஞ்சி = மதில். நஞ்சின் வெய்யோன் = நஞ்சினும் கொடிய இராவணன், உரும் = இடி.

மதில் சூழ்ந்திருப்பதால் யாரும் உன்னைக் கொல்ல வர முடியாது. மற்றும், சிறிய இடமாயிருப்பின் பகைவர்கள் உன்னை எளிதில் தேடிக் கண்டுபிடித்து விடுவர். இடம் பெரிதாதலின் ஒரு மூலைக்கு ஒரு மூலை மாறி மாறி மறைந்திருக்கலாம். எனவே அஞ்சாதே - எனக் கிண்டல் செய்து, வெறுப்புடனும் சினத்துடனும் கைகளைக் கொட்டி இடியென முழங்கி ஏளனச் சிரிப்பு சிரித்தான். இஃதும் எள்ளல் காரணமாக வந்த நகைப்பேயாகும்.

இரணியன்

மீண்டும் வீடணன் கூறுகிறான். அண்ணா! நம் அரக்கர் குலத்து முன்னோர் பலர் திருமாலால் அழிந்துள்ளனர். அதுபோல் நாமும் அழியலாகாது. எடுத்துக்காட்டாக, நமது அரக்கர் குல இரணியன் எவ்வாறு அழிந்தான் என்பதை உனக்கு நினைவூட்ட அவன் வரலாற்றைக் கூறுவேன் கேள் என இரணியனது வரலாறு கூறலானான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/101&oldid=1203378" இலிருந்து மீள்விக்கப்பட்டது