பக்கம்:தமிழ் அங்காடி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார் 101


மைந்தனும் என்பதில் உள்ள ‘உம்’ என்பது, எதிர்கால வீடணனைத் தழுவுவதால் 'எதிரது தழிஇய எச்ச உம்மை’ எனப்படும். நீயுமே என்பதிலுள்ள 'உம்' என்பது, இறந்தகாலப் பிரகலாதனைத் தழுவுவதால் இறந்தது தழிஇய எச்ச உம்மை எனப்படும். 'நீயுமே' என்பதில் உள்ள ‘ஏ’ என்பது, தேற்றப் பொருளிலும் பிரிநிலைப் பொருளிலும் உள்ளது.

உள் பகை

இராவணன் மேலும் கூறுகிறான். தம்பீ! நீ மனிதரிடம் நட்பு கொள்கிறாய்; என்னை வென்று அரசைக் கைப்பற்ற உறுதி பூண்டுவிட்டாய். உன் செயல் திட்பமானது. இனி எனக்குப் பகைவர் நின்னையின்றி வேறொருவர் வேண்டுமோ?

நண்ணினை மனிதரை நண்பு பூண்டனை
எண்ணினை செய்வினை என்னை வெல்லுமாறு உன்னினை அரசின்மேல் ஆசை ஊன்றினை திண்ணிது உன்செயல் பிறர் செறுநர் வேண்டுமோ?
(6)

என்னை வென்று அரசைக் கைப்பற்றுவதற்காகத்தான் நீ மனிதருடன் நட்புகொள்ள முயல்கிறாய். திட்பமான செய்வினைத் திட்டத்தைத் தீட்டுகிறாய். ஆசை ஊன்றினை என்பதில் உள்ள 'ஊன்றுதல்’ என்பது, வழுக்காமல் - தவறாமல் உறுதியாய்ப் பயன் அளித்தலைக் குறிக்கும். ஈண்டு, 'இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே' (415) என்னும் குறள் பகுதியிலுள்ள ஊற்று (ஊன்று) என்பது ஒப்புநோக்கத் தக்கது.

மற்றும், வெளிப்படையாய்ச் செயலாற்றும் பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை; ஏனெனில், அவரது வஞ்சம் அறிந்து முன்கூட்டி நம்மைத் தற்காத்துக் கொள்ளலாம். ஆனால், உடனிருந்து கொண்டே பழிவாங்கும் உட்பகைவர்க்கு அஞ்ச வேண்டும்; ஏனெனில், அவர்கள் திடீரென எப்போது அழிவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/103&oldid=1203385" இலிருந்து மீள்விக்கப்பட்டது