பக்கம்:தமிழ் அங்காடி.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192  தமிழ் அங்காடி


முழக்கில் எழும் இன்னொலி கேட்டு, அதில் ஈடுபட்டுத் தன் தன் பகைமை மறந்து மயங்கி நிற்கும். கரை நீராடுவோர் வெள்ளத்திலுறும் மின் விசையால் அறியாமைப் பிணி நீங்கப் பெறுவர். ஞானியாரின் பேச்சால் விளைந்த நலன் அளப்பரியது...”

இங்கே, இவ்வளவு சுவையாக எழுதிய திரு.வி.க.வைப் பாராட்டுவதா? இவ்வளவு பாராட்டிற்கு உரிய ஞானியாரைப் பாராட்டுவதா? இத்தகைய ஞானியாரின் அடக்கம் காண வேண்டுமென்று விரும்பிய வ.சுப.மா.வின் உயரிய தமிழ்ப் புலமைப் பண்பைப் பாராட்டுவதா?

இவ்வளவு பெருமைக்கு உரிய ஞானியார் அடிகளாரின் வாழ்க்கை வரலாற்றை என்னை எழுதிக் கொடுக்கும்படிப் பணித்து வாங்கி அண்மையில் வெளியிட்ட பேராசிரியர் டாக்டர் ச. மெய்யப்பன் அவர்களும், இந்த வகையில், வ. சுப. மா. வைப்போலவே பாராட்டப் பெறுதற்கு உரிய ராவர்.

வ. சுப. மா.வின் விருப்பப்படி மறுநாள் காலையில் அவரைப் புதுச்சேரியிலிருந்து திருப்பாதிரிப்புலியூர்க்கு அழைத்துச் சென்றேன். பேருந்தில் சென்று கொண்டிருந்த போதும் வழியில் அரிய கருத்து ஒன்று அவர் கூறினார். அந்தக் கருத்து எனக்கு மிகவும் பயன்பட்டது. அதாவது:

நாம் இலக்கிய வழக்குச் சொற்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கும் சில சொற்களைப் பொதுமக்கள் தம்மை அறியாமலேயே பேச்சு வழக்கில் பயன்படுத்துகிறார்கள். காட்டாகக் 'கொடுமை' என்னும் சொல்லை எடுத்துக் கொள்வோம். கொடுமை என்பதற்குப் பொல்லாத தன்மை என்ற பொருள் உள்ளமை அனைவர்க்கும் தெரியும், ஆனால், கொடுமை என்பதற்கு வளைவு’ என்னும் பொருளும் உண்டு என்பது எல்லாருக்கும் தெரியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/194&oldid=1204334" இலிருந்து மீள்விக்கப்பட்டது