பக்கம்:தமிழ் அங்காடி.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

266  தமிழ் அங்காடி



தமிழர்கள் திருக்குறளை மறந்தது உண்மைதான். மறக்கச் செய்யும் ஒருவகை ஆற்றல் இன்றும் இருக்கிறது என்பதும் உண்மைதான். ஆனால் திருக்குறள் தமிழர்களை மறக்கவில்லை. அவர்களை அனைத்துலகிற்கும் அறிமுகம் செய்து வைக்க அது மறக்கவில்லை. திருக்குறள் தன் கருத்தின் திண்மையாலும் வன்மையாலும் உலக மக்களைக் கவர்ந்ததன் வாயிலாக, இவ்வளவு சிறந்த நூலைத் தந்தது தமிழினம் என உலகம் எண்ணி வியக்கும்படித் தமிழர்களை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளது திருக்குறள்.

திருக்குறள் எண்ணற்ற மொழிகளில் பெயர்க்கப் பெற்றிருப்பது, அம்மொழியாளர்களின் பரந்த பான்மைக்குச் சான்று அன்று; பின் என்ன? அதுவா? திருக்குறளின் பரந்து விரிந்த பான்மைக்குச் சான்றாகும்.

உலகைக் கவர்ந்தது எவ்வாறு?

திருவள்ளுவர் புதிய முறையில் - புரட்சியான் முறையில் கருத்தை வெளியிட்டதனால், திருக்குறள் உலகைக் கவர முடிந்தது.

டாக்டர் கிரெளல் (C. Graul, D.D.) என்னும் செர்மானிய அறிஞர், இன்பத்துப் பாலில் உள்ள

        "இருநோக்கு இவள் உண்கண் உள்ளது ஒரு நோக்கு
        நோய் நோக்கு ஒன்று அந்நோய் மருந்து”

என்னும் குறளை ஒருநாள் தற்செயலாய்க் கண்டு அதன் பொருளை அறிந்ததும் அப்படியே மெய்ம் மறந்துவிட்டாராம். ஆ! இப்படியும் ஒரு கருத்து உள்ள பாடல் இருக்கிறதா! ஒருத்தியின் நோக்கிலேயே இரு நோக்கு: அவற்றுள் ஒன்று நோய் தருகின்றது - மற்றொன்று அதற்கு மருந்தாகிறது. என்ன அழகான கருத்து! எவ்வளவு அருமையான கற்பனை! இந்நூல் முழுவதும் படிக்க வேண்டும் - மொழி பெயர்த்துக் கொள்ளவும் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/268&oldid=1204481" இலிருந்து மீள்விக்கப்பட்டது