பக்கம்:தமிழ் அங்காடி.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

270  தமிழ் அங்காடி



வறுமையைவிடத் துன்பமானது வேறில்லை என்றான் ஒருவன். திருவள்ளுவர் அவனை நோக்கி, வறுமையைவிடத் துன்பமானது இருக்கிறதே - அது என்ன எனில், மேலும் மேலும் தொடர்கின்ற அந்த வறுமையே தான் என்று கூறி விளையாடியுள்ளார்.

“இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது"

என்பது குறள். அவனைவிடக் கெட்டவன் யாரும் இல்லை - அவனைவிடக் கெட்டவன் அவனேதான் என்று கூறுவது போன்றது இது.

பெண் ஒருத்தியின் கணவன் வெளிநாடு சென்றிருந்தான். ஊர் திரும்பி வீட்டிற்கு வந்ததும் மனைவியை நோக்கி, நான் வெளியூரில் இருந்தபோது அடிக்கடி நின்னை நினைத்தேன் என்றான். உடனே அவள், அவன்மேல் ஊடல் (செல்லக் கோபம்) கொண்டு பேசவும் நெருங்கவும் மறுத்தாள். ஏன் இவ்வாறு இருக்கிறாய் என்று அவன் கேட்டான். பின் என்ன - நீங்கள் என்னை நினைத்ததாகச் சொன்னீர்களே - என்னை மறந்திருந்ததனால் அல்லவா பின்னர் நினைக்க வேண்டியதாயிற்று. மறக்காமல் இருந்தால் நினைக்கவேண்டி யிராதே - ஏன் மறந்தீர் - என்று பிகுவு காட்டினாள். பிகுவு காட்டக்கூடிய இடம் இதுதானே!

"உள்ளினேன் என்றேன்மற்று என்மறந்தீர்
என்றென்னைப்
புல்லாள் புலத்தக்க னள்"

என்பது பாடல். நினைவும் மறதியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. மறதி என்பது, ஒன்றை நினைக்க வேண்டிய நேரத்தில் வேறொன்றை நினைப்பதாகும். நினைவு மாற்றமே மறதியாகும்- என்பது உளவியல் கருத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/272&oldid=1204487" இலிருந்து மீள்விக்கப்பட்டது