பக்கம்:தமிழ் அமுதம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

வாகக் கருதப்பட்டுவிட்டன. இராமாயணம் சூரியகுல அரசனைப் பற்றிய வரலாறு, பாரதம் சந்திரகுல அரசர்களைப் பற்றிய வரலாறு என்று நூல்கள் கூறுகின்றன. அரசர்குல வரலாறுகளை வரலாற்று முறையில் படிப்பதே பொருந்தும். இவ்வரலாறுகளில் கடவுளரைப் புகுத்திச் சமய நூல்களாகச் செய்துவிட்டமை, இடைக்காலத்தில் நேர்ந்த தவறு. இதுவே வரலாற்று ஆசிரியர்கள் கூறும் கருத்தாகும். அறிவும் ஆராய்ச்சியும் போதிய அளவு வளர்ச்சி பெறாத நமது நாட்டில், வரலாறு எது, சமயம் எது, என்பதைப் படித்தவர் பலரும் புரிந்துகொள்ளா திருத்தல் நாடு செய்த தவக் குறையேயாகும்.

ஒழுக்கக் கல்வி

மனிதன் இவ்வுலகத்தினையும், இதனில் தோன்றும் சுடுகதிரையும், தண்மதியையும், விண்மீன்களையும் பிறவற்றையும் படைக்கும் ஆற்றல் வாய்ந்த ஒன்று இருத்தல் வேண்டும் என்று நினைப்பது இயல்பு. அந்த ஒன்றுக்கு அவன் மரியாதை செய்தலும், நன்றி செலுத்துதலும் இயல்பு. மனிதன் சமுதாயத்தில் ஒருவனாக இருந்து நேர்மையான முறையில் வாழ்க்கை நடத்துதல் வேண்டும். அதற்கு வேண்டுவன கல்வி, அன்பு, உண்மையுடைமை, ஒழுக்கமுடைமை, உழைப்புடைமை, முயற்சியுடைமை முதலியன. இவற்றை நன்றாக வரையறுத்துக்கொண்டு, ஒவ்வொன்றையும் விளக்கிக்கூறும் முறையில் உலகப்பெரியார் வரலாறுகளி லிருந்து மேற்கோள்களைக் காட்டி நூல்களை வரைதல் நல்லது. அந்நூல்களைப் பாடமாக வைத்தல், மாணவனுடைய அறிவினையும் ஒழுக்கத்தினையும் பயன்படுத்தப் பெருந்துணை செய்யும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/27&oldid=1366816" இலிருந்து மீள்விக்கப்பட்டது