பக்கம்:தமிழ் அமுதம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63

போதம் என்பது. இதனை இயற்றியவர் மெய்கண்டார் என்பவர். இது பன்னிரண்டு சூத்திரங்களைக் கொண்ட சிறிய நூல். இதற்கு எழுதப்பட்ட மிகப் பெரிய விளக்கமே சிவஞான சித்தியார் என்பது. இச் சைவசித்தாந்தம் தமிழ் மக்களது மிக உயர்ந்த சமயப் பண்பாட்டை விளக்குவதாகும். இதனை மேனாட்டு அறிஞர் மிக வியந்து பாராட்டியுள்ளனர்.

வைணவ விருத்தி உரைகள்

ஆழ்வார் பன்னிருவரும் பாடியுள்ள நாலாயிரம் பாடல்களுக்குச் சோழர் காலத்தில் இருந்த வைணவ ஆச்சாரியர் பலர் விரிவான உரைகளை எழுதியுள்ளனர். அவற்றுள் நம்மாழ்வார் பாடிய திருவாய் மொழிக்குப் பலர் விருத்தியுரைகள் எழுதியுள்ளனர். அந்த உரை வடமொழியும் தமிழும் கலந்தது. மணியும் முத்தும் கோத்தாற்போலத் தமிழும் வடமொழியும் கலந்து எழுதப் பட்ட நடை ஆதலால் அது மணிப்பிரவாள நடை எனப்பட்டது. வடமொழியறிவின் துணையில்லாமல் அவ்வுரையைப் படித்துப் பொருளுணர முடியாது. அது வடமொழிப் புலவர்களான வைணவ ஆச்சாரியர்கள் எழுதிய விளக்கவுரையாதலால் இந்நிலையில் அமைந்துள்ளது. அந்த விருத்தியுரையால் அக்காலத் தமிழ் மக்களின் பழக்கவழக்கங்களும் ஆட்சிச் சொற்களும் பிறவும் நமக்கு விளங்கும்.

பிற்காலப் புராணங்கள் : கி. பி. 14-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு தமிழகத்தில் தமிழரசு இல்லை. தமிழகம் முசுலிம்கள் ஆட்சிக்கும் விசயநகர வேந்தர் ஆட்சிக்கும் நாயக்கர் ஆட்சிக்கும் மகாராட்டிரர், கருநாடக நவாபுகள் ஆட்சிக்கும், இறுதியில் மேனாட்டார் ஆட்சிக்கும் உட்பட்டது. இங்ஙனம் தமிழகம் வேற்று மொழி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/62&oldid=1459181" இலிருந்து மீள்விக்கப்பட்டது