பக்கம்:தமிழ் இனம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58 தமிழ் இனம்

யாவற்றையும் விடாமற் கூறும் இளங்கோவடிகள் தாலி கட்டுதலைக் கூறாது விடுவரோ ? எண்ணிப் பாருங்கள்.

மங்கல அணி ‘ என வருமிடத்தெல்லாம் இயற்கை அழகு எனப் பொருள் கூறிச் செல்லும் அரும்பத உரையாசிரியர் முதலில் மட்டும் தாலி கூறினர் எனக் கோடல் பொருந்துவதாக இல்லை. அஃது இடைச் செருகல் அல்லது ஏடெழுதினோர் செய்த தவறெனக் கோடலே பொருத்தமெனத் தோன்றுகிறது.

அடிகள் காலத்தில் ‘தாலிகட்டுதல் வழக்கமாக இருந்திருக்குமாயின், அச்சிறப்புடை வழக்கத்தை அவர் விட்டிருத்தல் இயலாதன்றாே ? அங்கு அவர் விட்டுவிட்டதாகக் கொண்டாலும், கோவலன் கொலையுண்டபோது அவள் புலம்பியதாகக் கூறும் அடிகளிலேனும் தாலி யைப்பற்றிய குறிப்பு வந்திருக்க வேண்டுமே! கண்ணகி தாலியைக் கூறிப் புலம்பியதாகவும் தெரியவில்லையே, தாலி இருந்திருக்குமாயின், அவள் அதனையன்றாே அறுத்து மதுரைமீது எறிந்திருப்பாள் இடமுலை யைத் திருகவேண்டிய அவசியம் ஏற்பட்டிரா தன்றாே ? அவள் கணவனை உயிர்ப்பித்த இடத்தும் தாலி பற்றிய பேச்சே இல்லை. மதுரையை அழல் கொண்ட பின்பு புறப்பட்ட கண்ணகி, மதுரை எல்லையில் கொற்றவை (துர்க்காதேவி) கோயில் முன் தன் வளையல்களைத் தூளாக்கி நடந்தாள் என்பதிலிருந்தேனும் உண்மை உணரலாமன்றாே ? தாலி இருந்திருக்குமாயின், அதனை அவள் கழற்றினாள் என இளங்கோவடிகள் கூறாதிருப்பரோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/55&oldid=1359560" இலிருந்து மீள்விக்கப்பட்டது