பக்கம்:தமிழ் இனம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சாக்கைக் கூத்து

77

தக்கதாகவும் காட்சியளிக்கும். அவ்வாடை பற்றிய விளக்கத்தை வருணிக்க இயலாது.

சாக்கையனுக்குப்பின் 'நம்பியார்' என்பவன் நின்றிருப்பான். அவனுக்கு முன் 'மிளாவு' (முழவு) என்ற வாத்தியம் வைக்கப்பட்டிருக்கும். அதன் ஓசை இடியோசையை ஒத்திருக்கும். கூத்தின் தொடக்கத்திலும், இறுதியிலும், சாக்கையன் பாடும் வடமொழிச் சுலோகத்தின் நடுவிலும் கடைசியிலும் நம்பியார் முழவைத் தட்டுவான்.

நம்பியார் இனத்தைச் சேர்ந்த பெண்மணி நங்கையார் எனப்படுவாள். அவள் தாளத்தைக் கையிற் பிடித்தபடி சாக்கையனுக்கு எதிரில் அமர்ந்திருப்பாள். அவள் அத்தாளத்தை வேண்டும் போது தட்டுவாள். அவையோர் அனைவரும் தலையசைத்தும் உடலசைத்தும் சாக்கையனாடும் கூத்தினையும்-பேசும் புேச்சினையும் கேட்டு மகிழ்ச்சி கொள்ளும்போதும் இந்நங்கையார் சிலை போல அமர்ந்திருப்பாள். அவள் சிறிது புன்முறுவல் கொள்ளினும் கூத்து உடனே நிறுத்தப்படும். நங்கையாரும் தெய்வங்களைப்போல வேடம்புனைந்து அதே மேடையில் நடித்தலும் உண்டு.[1]

சாக்கையன் அவையில் உள்ளோரைக் குறிப்பிட்டும் இடையிடையே வேடிக்கையாகப் பேசுவான். ஆனால், அப்பேச்சு எவரையும் புண்படுத்தாது. எல்லோரும் அதனை இன்பமாகக் கேட்பர். சாக்கையன் வீமனைப் போல நடிக்கும் பொழுதும் பேசும் பொழுதும் அவையோர் வீமனே வந்து நடிப்பதாக


  1. Castes and Tribes of S. I., Vol. V, p. 151,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/74&oldid=1394126" இலிருந்து மீள்விக்கப்பட்டது