பக்கம்:தமிழ் இனம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

தமிழ் இனம்



3. உரையாடல்

தோழியும் தலைவியும், தோழியும் தலைவனும், தலைவனும் தலைவியுமாக உரையாடும் செய்யுட் பகுதிகள் நிரம்பியது இக்குறிஞ்சிக்கலி. குரவையாடுகையில் உரையாடலும் (செ. 3), வள்ளைப் பாட்டில் உரையாடலும் (செ. 4, 5, 6, 7) இன்பச் சுவை பயப்பன. செ. 25-இல் தோழிக்கும் தலைவற்கும் நடைபெறும் உரையாடல் நகைச்சுவை பயப்பது. செ. 26-இல் தலைவி தலைவன்மீது காமப்பழி சுமத்தலும், அவன் பதில் கூறலும், அவள் முடிவு கூறலும் கற்றாேர் இதயம் களிப்பிக்கும். காட்டாக ஒன்று காட்டுதும்:

[பாறையாகிய உரலில் மூங்கில் நெல்லையிட்டு யானைத் தந்தமாகிய உலக்கையால் குற்றிக் கொண்டே தோழியும் தலைவியும் பாடுதல்; இங்குத் தலைவி தலைவனை இயற்பழிக்கிறாள்; தோழி இயற்பட மொழிகிறாள்.]

தலைவி:- என்ன வியப்பு! சூள் பொய்த்த நம் தலைவன் மலையில் உள்ள அருவி நிறைய நீர் இருக்கிறதே!

தோழி:- சூள் பொய்த்தவனோ? அவன் சூளில் பொய் தோன்றுமாயின், அது திங்களில் தீ தோன்றியது போலாம்.

தலைவி:- என்னிடம் கூறியபடி வாராதவன் மலையில் இளமழை ஆடுகின்றதோ? என்ன வியப்பு!

தோழி:- வாராதிருப்பனோ? அவன் அருளிடத்தே கொடியது தோன்றும் என்பது, குளத்து நீரில் உள்ள குவளை வெந்தது போலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/87&oldid=1394135" இலிருந்து மீள்விக்கப்பட்டது