பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

தமிழ் இலக்கியக் கதைகள்

ஏதோ கூறினார். அவர்களும் முகமலர்ச்சியோடு அவர் கூறியதை வரவேற்று ஒப்புக்கொண்டனர்.

பல்லக்கு, புலவருக்கு அருகில் கொண்டு வந்து வைக்கப் பட்டது.கருப்பண்ண வள்ளல் ஒரு பெரிய வட்டத் தாம்பாளத்தில் பரிசில்களைப் புலவரிடம் வணக்கத்தோடு அடக்க ஒடுக்கமாக நின்று கொண்டு அளித்தார். புலவர் அதைப் பெற்றுக்கொண்டு பல்ல்க்கில் ஏறி அமர்ந்தார். பல்லக்கில் அவரது முள் தைத்து வீங்கிய கால் உறுத்தாமல் இருப்பதற்காக மெத்தை விரிக்கப் பட்டிருந்தது.

“என்ன? பல்லக்குத் துக்குபவர்களை இன்னும் காணவில்லையே? விரைவில் வருமாறு சொல்லி அனுப்பினீர்களோ இல்லையோ?” பல்லக்கில் அமர்ந்து கொண்டதும் புறப்பட்டுச் செல்லும் வேகம் மனவேகத்தை உந்தித்தள்ள ஆவலோடு புலவர் இப்படிக் கேட்டார்.

“அவர்கள் வந்துவிட்டார்கள்! இங்கேதான் அந்தப் பக்கமாகப் போயிருக்கிறார்கள்! இதோ நான் போய் அழைத்து வருகிறேன்”-என்று புலவருக்கு விடை சொல்லிக் கொண்டே மூடுபல்லக்கின் திரைச் சிலையை இழுத்து மூடிக்கட்டி மாட்டினார் கருப்பண்ண வள்ளல்.புலவர் நன்றாகக் காலை நீட்டி வசதியாக உள்ளே அமர்ந்துகொண்டார்.இரட்டையாக மடித்துத் தொங்கவிடப்பட்டிருந்த மெல்லிய பட்டுத் திரைச் சிலையின் வழியே பல்லக்கிற்குள் மிக மங்கலான ஒளியே பரவியிருந்தது. பல்லக்குக்கு உள்ளிருப்பவர்க்கும் வெளியே இருப்பவர்க்கும் இடையே மறைவை உண்டுபண்ணியது அந்தத் திரை.

பல்லக்கு புறப்பட்டு வீட்டு வாசலுக்கு வந்தது, அதன் முன்பக்கத்துக் கொம்பு கருப்பண்ண வள்ளலின் வலது தோள் மேலே இருந்தது. பின்பக்கம் அவருடைய இளைய தம்பி தாங்கிக் கொண்டிருந்தார். மற்ற இரண்டு தம்பிகளும் தோள் மாற்றிக் கொள்வதற்காகத் தயாராகப் பின் தொடர்ந்து உடன்வந்து கொண்டிருந்தனர்.