பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/117

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


நா. பார்த்தசாரதி 15

இப்படி ஒரு தனி மலராகத்தான் இருந்தது. மனைவி, மக்கள் என்று இவ்வாறு குடும்பம் பெருகியபோது வறுமையும் அழையா விருந்தாகத் தானே வலுவில் வந்து பெருகியது. வறுமை வெயிலின் காய்கதிர்களின் வெம்மையால் அந்த மலர் உள்ளம் அப்போது தான் முதன் முதலாக வாட்டங்காணத் தொடங்கியது.

கவிதைகளைப் பரிசில் பெறும் கருவிகளாக மாற்றிக் கொள்ளவேண்டிய அவசியம் இப்போது அவருக்கும் நேர்ந்தது. பழுத்த மரங்களை நாடிச்செல்லும் பறவைகளைப் போல அவரும் வள்ளல்களைத் தேடிக் கால் தேய நடக்கலானார். ஏடும் எழுத்தாணியும் சுமந்து அலைந்ததற்குத் தகுந்த பயன்தான் கிடைக்கவில்லை. சாளுவ வம்சம் விஜய நகரத்து அரசர் மரபில் வந்தது.அந்த மரபில் வந்த சிற்றரசர்கள் சிலர் சொக்கநாதப் புலவர் காலத்தில் சிறந்து விளங்கி வந்தனர். அவர்களில் கோப்பைய ராயன் மகனாகிய திப்பைய ராயன் என்பவன் புலவர்களைப் போற்றும் வள்ளலாக இருந்தான். கவிச்சுவையும் கலையார்வமும் இளகிய நெஞ்சமும் படைத்தவன் திப்பைய ராயன். கலைஞர்கள். துன்பங்களையோ, வறுமையையோ தனக்குற்றவை போல எண்ணி உடனே உதவும் நல்ல இயல்பினன்.

இத்தகைய நற்பண்புகள் அமையப் பெற்ற திப்பைய ராயனிடம் போனால் தம் துயரங்களைக் குறிப்பாகக் கூறி உதவி பெறலாம் என்று கருதினார் சொக்கநாதர். திப்பைய ராயன் புலவர்கள் என்றால் வண்டுக்கு விரியும் மலர் போன்று நடந்து கொள்வான் என்று அவர் கேள்விப்பட்டிருந்ததனால் 'அவனிடம் பழகுவது கடினமோ?' என்ற அச்சம் அவருக்கு ஏற்படவில்லை. மற்றவர்களிடம் செய்ய வேண்டியிருந்தது போலத் தன் மதிப்பு இன்றி வெளிப்படையாகத் தமது வீட்டுத் துன்பங்களை எல்லாம் விவரிக்க வேண்டிய நிலை திப்பைய ராயனிடம் இல்லை என்ற நம்பிக்கை வேறு அவருக்கு ஊக்கமளித்தது.புலவர் புறப்பட்டார். சொக்கநாதரைப் பற்றிப் பொதுவான செய்திகளை அவரே கூற அறிந்து கொண்ட திப்பையராயன் அவரை மகிழ்ச்சியுடனே வரவேற்றுக் கனிந்த சொற்களால் உரையாடினான். உயர்ந்த