பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/134

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
132
தமிழ் இலக்கியக் கதைகள்
 

செல்வப்பேறும் பதவியும் தமக்கு வரமுடியும் என்ற எண்ணம் கல்லும் நெல்லும் தூக்கிச் சுமந்து வாழ்ந்த அந்த இளமைக் காலத்தில் கனவிலேகூட அவருக்குத் தோன்றியதில்லை.

இளமையில் ஏழ்மையின் தொல்லைகளைத் தாமே நன்கு அனுபவித்து அறிந்திருந்தவர் ஆகையால், 'அப்போது எந்தப் பொருளின்றி நாம் ஏங்கினோமோ, அது இன்று நம்மிடம் வந்து சேர்ந்திருக்கின்றது! நம்மைப் போல் இன்றும் ஏங்கிக் கிடக்கும் ஏழையர்க்கும் இரவர்க்கும் அவர்களுக்கும் மேலாகக் கலைஞர்களுக்கும் கவிஞர்களுக்கும் வாரி வாரி வழங்குவோம். அதுதான் அன்று நம்மை வருத்திய செல்வத்தை இன்று நன்றாகப் பழி வாங்குவதற்கு ஏற்ற வழி என்று எண்ணினார் அவர். அப்படியே செயலாற்றியும் வந்தார்.' செல்வம்' 'செல்வம்' என்று சொல்லும் பொருளைச் 'செல்வத்துப் பயனே ஈதல்’ என்ற மொழிக்கேற்பச் செல்லவிட்டுப் புகழடைந்து கொண்டே அவர் வாழ்க்கையைக் கழித்து விட வேண்டும் என்று கருதினார்.

பிறருக்குக் கொடுத்து மகிழும் விருப்பத்தையே ஒரு பொழுதுபோக்காகக் கொண்டிருந்த இவரிடம் நாள் தவறினாலும் கலைஞரும் கவிஞரும் வந்து பரிசில் பெற்றுப் பழகிப்போவது தவறாது. வருகின்றவர்களின் மனப் பண்பை அறிந்து அதற்கு ஏற்றதுபோல உதவுகிற பண்பும் புண்ணிய கோட்டி முதலியாரிடம் சிறப்பாக அமைந்திருந்தது.

அன்று நடுப்பகலில் ஒரு புலவர் அவரைத் தேடிவந்தார். அப்போது வேனிற்காலம் தொடங்கும் பருவமாக இருந்ததனால், புண்ணியகோட்டி முதலியார் தம்முடைய மாளிகைக்கு முன் கோடை நாட்களுக்காக ஒரு பெரிய பந்தல் போட்டிருந்தார். பந்தலின் கீழே குளிர்ச்சிக்காக ஆற்று மணலை வண்டிகளில் கொண்டு வந்து பரப்பிக் கொண்டிருந்தார்கள். முதலியார் அவற்றை மேற்பார்த்துக் கொண்டிருக்கிற தருணத்திலேதான் அந்தப் புலவரும் வந்து சேர்ந்தார். மாளிகை முன்குறட்டில் அமர்ந்துகொண்டிருந்த முதலியார், தாமே வலுவில் அங்கிருந்து எழுந்து வெள்ளை வெளேரென்ற புதிதாகப் பரப்பியிருந்த