பக்கம்:தமிழ் இலக்கியக் கதைகள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

தமிழ் இலக்கியக் கதைகள்

புலவன் நோயிலிருந்து பிழைத்துவிட்டான். ஆனால் பிழைத்து என்ன பயன்? தந்தை, தாய், சுற்றத்தார் எல்லோரும் மாண்டபின் ஊர் ஊராகவா இருக்கும்? சுடுகாடாகத் தோன்றியது. பொலி விழந்து போன ஊரில் தெருவுக்கு நேரே பொலிவிழக்காமல் இருந்த சிவன் கோவிலைப் பார்த்தான் புலவன். சுடலைக்குப் போய் ஆடி மகிழும் கடவுள், அங்கே போவதற்குச் சோம்பல் கொண்டு தான் இருக்குமிடத்தையே சுடலையாக்கிக் கொள்ள முயன்றது போலிருந்தது ஊர். எங்கும் அழிவு, எங்கும் அவலம். கோவிலிலிருக்கும் சிவபெருமானின் கண்பட்டுப் பட்டுத்தான் ஊர் அப்படியாகிவிட்டதோ என்று கடவுள் மேலேயே வெறுப்பு வந்தது புலவனுக்கு அந்த ஊர்ச் சிவபெருமானுக்கு ஆபத்சகாயன் என்று பெயர்.ஆனால் அவன் திருவருள் என்னவோ ஆபத்துக்குச் சகாயம் செய்யவில்லை. முன்பு கடல் நஞ்சைக் குடித்த சிவபெருமான் அவற்றை இப்போது நாட்டில் உமிழத் தொடங்கி விட்டானோ என்று சினம் கொண்ட புலவன் வஞ்சப் புகழ்ச்சியாக ஒரு பாட்டுப் பாடினான்.

தந்தைபோய்த் தாய்போய்த் தமர்போய்என் சுற்றமும்போய்
வெந்த புரியாகி விட்டேன் - முந்தவே
ஆழாழி நஞ்சுண்ட ஆபத் சகாயனெனும்
பாழாவான் கண்ணேறுபட்டு.”

துன்பம் எரித்து அழித்த பின்பும் தோற்றமழியாது தான் நிற்கும் நிலைக்கு எரிந்த வைக்கோற் படைப்பை உவமை கூறிய அழகுக்கு ஈடு ஏது? எத்தனை பொருத்தமான உவமை இது!