பக்கம்:தமிழ் இலக்கிய அகராதி.pdf/548

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

யாப்பருங்கலவிருத்தி

544

வாக்குண்டாம்


யாப்பருங்கலவிருத்தி = இதுவும் யாப்பிலக்கணத்தை விரித்துக் கூறும் நூல். இது சூத்திரப் பாவால் ஆனது. இதன் மூலம் செய்யுளை பற்றிய அரிய பெரிய குறிப்புகளைக் காணலாம். புதுப்புது செய்யுட்களின் பெயர்களை உணரலாம். ஆராய்ச்சி செய்பவருக்கு ஒரு பெருந்துணையான நூல். ஆசிரியர் அமிர்தசாகரர். காலம் 11-ஆம் நூற்றாண்டு. இந்நூலுக்கு உரையும் உண்டு.

யாழ்நூல் = இம்மாதிரியான நூல் ஒன்று இருந்ததாக நச்சினார்க்கினியர் தமது உரையில் மேற்கோள் கொடுத்திருப்பதன் மூலம் அறியலாம். ஆனால், இது போது அந்நூல் கிடைத்திலது. 20-ஆம் நூற்றாண்டில் மயிலேறும் பெருமாள் பிள்ளையாகிய சுவாமி விபுலானந்தர் என்பவரும் உரைநடையில் இப்பெயரால் ஒரு நூல் எழுதியுள்ளார். இதில் யாழ் வகைகளையும் அவற்றின் உருவங்களையும் மற்றும் பல அரிய குறிப்புகளையும் எடுத்துக்காட்டியுள்ளார். ஆராய்ச்சிக்கு உகந்த நூல்.

வளையாபதி = ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று. இந்நூல் முற்றிலும் கிடைத்திலது. உரைகளில் மேற்கோளாகக் காட்டப்பட்ட சில பாடல்களே கிடைத்துள்ளன. இது சமண சார்புடைய நூல். இது சீவக சிந்தாமணிக்கு உட்பட்டது. ஆகவே,இது பத்தாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நூல்.

வா

வாக்குண்டாம் = இந்நூல் நீதிகளை அறிவிப்பது. ஔவையார் பாடினதாகக் கூறப்பட்டு வருவது. வாக்குண்டாம் என்று முதல் பாடல் தொடங்கப்பட்டமையின் அத் தொடக்கப் பெயரே நூலுக்கு அமைக்கப்பட்டது. இந்த ஔவையார் சங்க காலத்து ஔவையார் அல்லர். இதில் வான்கோழி குறிப்பிடப்பட்டிருத்தலின், இது ஆங்கில ஆட்சி தமிழ் நாட்டில் நிலவத் தொடங்கிய காலத்தில் எழுதப்பட்டதாகக் கருதலாம். ஆகவே இது கி.பி.16ஆம் நூற்றாண்டு நூல் எனக் கருத இடமுண்டு.