பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சோழர் காலம்

149


பௌத்தக் காப்பியம்

விம்பசார கதை என்னும் நூல் மறைந்து போன நூல்களில் ஒன்று. புத்த சீடனாம் மகத நாட்டு மன்னன் விம்பசாரன் வரலாற்றினை இந்நூல் கூறுகிறது. நீலகேசி உரையாசிரியர் இந்நூலின் நான்கு அடிகளை மேற்கோள் காட்டியுள்ளார்.

திருமுறைச் சான்றோர்கள்

செப்பறை என்னும் ஊரிலே பிறந்தவர் என்று கருதப்படும் சேந்தனார், திருவிசைப்பாவில் மூன்று திருப்பதிகங்களும் திருப்பல்லாண்டும் பாடியுள்ளவராய் விளங்குகிறார். இவரும் ஒன்பதாம் திருமுறையில் சில பாடல்கள் பாடிய சான்றோரான திருமாளிகைத் தேவரும் ஒருவரே எனத் திரு அ. கோபி நாதராயரும்,[1] இருவரும் வேறு வேறு அடியார்கள் எனத் திரு. நீலகண்ட சாஸ்திரிகளும் கூறுவர். ஒன்பதாம் நூற்றாண்டின் இடையில் காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த மற்றொரு சான்றோர் பட்டினத்தடிகள் ஆவர்.[2] வணிகர் குடியில் பிறந்து வளமான வாழ்வு வாழ்ந்த இவர் இவ்வுலகப் பொருள்களின் நிலையாமையை உணர்ந்து துறவு பூண்டார். இவர் 'பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்தடிகள்போல் யாரும் துறக்கை அரிது' என்று 'பாராட்டப்படுகின்றார். இவர் இயற்றியனவான திருவொற்றியூர் ஒருபா ஒரு பஃது, திருக்கழுமல மும்மணிக்கோவை, திருவிடைமருதூர் மும்மணிக்கோவை, திருவேகம்பமுடையார் திருவந்தாதி, கோயில் நான்மணிமாலை ஆகிய ஐந்து நூல்களும் பதினோராந் திருமுறையில் காணப்படுகின்றன.


  1. செந்தமிழ் v3|11, ப.358 362
  2. The Colas, val II, Part 1, P. 537.