பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

தமிழ் இலக்கிய வரலாறு


முதலாம் பராந்தக சோழன் மைந்தராகிய கண்டராதித்தர் சிறந்த சிவபக்தர். இவருடைய மனைவியார் செம்பியன் மாதேவியாரும் சிவபக்தியில் சிறந்தவராய், கோயில் திருப்பணிகள் பல செய்துள்ளார். 'மேற் கெழுந்தருளின தேவர்' 'சிவஞான கண்டராதித்தர்' முதலான இவருக்கு வழங்கும் பெயர்கள், இவர் சிவன்பால் சிந்தை செலுத்திய பான்மையினை விளக்கும். இவர் தில்லை நடராசப் பெருமான்மீது ஒரு திருப்பதிகம் பாடியுள்ளார். அது ஒன்பதாம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது.

'தமிழ் வியாசர்' என வழங்கப்படும் நம்பியாண்டார் நம்பிகள் ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்த சான்றோர் ஆவர். அவர் மூவர் பாடிய தேவார இன்னிசைப் பாக்களையும் பின் வந்தவர்கள் பாடிய திருப்பாடல்களையும் தொகுத்துத் திருமுறைகளாக வகுத்துள்ளார். அவர் ஞானசம்பந்தப் பெருமான்மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். திருஞான சம்பந்தர் இயற்றிய திருப்பதிகங்கள் முதல் மூன்று திருமுறைகள் என்றும். திருநாவுக்கரசர் பாடிய பாடல்கள் அதனையடுத்த மூன்று திருமுறைகள் என்றும். சுந்தரமூர்த்தி நாயனார் பாடியது ஏழாம் திருமுறை என்றும், மாணிக்கவாசகரின் திருவாசகமும் திருக்கோவையாரும் எட்டாம் திருமுறை என்றும், திருமாளிகைத் தேவர் முதலிய ஒன்பதின்மர் பாடிய பாடல்கள் ஒன்பதாம் திருமுறை என்றும், திருமூலர் திருமந்திரம் பத்தாம் திருமுறை என்றும், காரைக்காலம்மையார், சேரமான் பெருமாள் நாயனார், நம்பியாண்டார் நம்பி முதலியோர் பாடல்கள் பதினோராந் திருமுறை என்றும், சேக்கிழார் இயற்றிய திருத்தொண்டர் புராணம் என வழங்கும் பெரிய புராணம் பன்னிரண்டாம் திருமுறை என்றும் சைவ சமய உலகிலே கருதப்படுகின்றன. நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திருவந்தாதி பிற்காலத்தில் எழுந்த பெரிய புராணத்திற்குக் கருவாய் அமைந்தது. இத் திருமுறைகள் பகுப்பானது இராசராச