பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சோழர் காலம்

151


சோழன் காலத்தில் ஏற்பட்டது என அறிஞர்கள் கருதுகின்றார்கள்.

சைவ சமயத்தின் முதற்கடவுளாம் சிவபெருமானின் திருவருட் செயல்களைச் சிறப்பித்துக் கூறும் கல்லாடம் என்னும் நூல் கல்லாடர் என்பவரால் இயற்றப்பட்டது. அக்கல்லாடர் எக்காலத்தில் வாழ்ந்தவர் என்பதை அறிய இயலவில்லை. பல்வேறு காலங்களிலும் இப் பெயருடையோர் சிலர் வாழ்ந்திருந்ததை நாம் வரலாற்றிற் காணலாம். 'திருக்கண்ணப்ப தேவர் திருமறம்' என்னும் நூலை இயற்றியவரும் கல்லாட தேவ நாயனார் என வழங்கப்படுகிறார். ஆசிரியப் பாவில் அமைந்திருக்கும் கல்லாடம் ஆலவாய் அண்ணலின் அருட்பெருக்கையும், புராணக் கருத்துகளையும், திருவிளையாடற் கதைகளையும், அடியவர் வரலாறுகளையும், இசை நாட்டியம் முதலிய நுண்கலைச் செய்திகளையும் கொண்டு பொருள், யாப்பு, அணி முதலியன மிளிர்ந்து திகழ்கிறது.

இலக்கண நூல்கள்

இக்காலத்திலே இலக்கண நூல்கள் பல எழுந்தன. எளிய மக்கள் இயன்ற அளவு புரிந்து கொள்ளும் வகையில் இவை இயற்றப்பட்டன.

நம்பியகப் பொருள்

இந்நூல் நாற்கவிராச நம்பி என்னும் சமணரால் இயற்றப்பட்டது. நூலின் சிறப்புப் பாயிரத்தினால், இவர் புளிங்குடி என்னும் ஊரினர் என்பதும், நம்பி நாயனார் என்பது இவர் இயற்பெயர் என்பதும் தெரியவருகின்றன. தொல்காப்பியத்தில் காணப்படும் அகப்பொருட் கருத்துக்களைக் காலத்திற்குப் பொருந்திய வகையில் எளிய இனிய முறையில் இந்நூல் விளக்குகிறது. இந்நூலுக்கு உதாரணச் செய்யுள்களாகப் பொய்யாமொழிப் புலவர் இயற்றிய