பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சோழர் காலம்

165


தம்பிரான் தோழனார் நம்பி' என்ற தொடரில், திருத்தொண்டர் என்ற பெயர் சுந்தரர்க்குரிய பெயராகக் கூறுகிறார். எனவே, பெரிய புராணத்தைச் சுந்தரர் வரலாற்றைக் கூறும் ஒரு நூலாகவே எடுத்துக் கொண்டால், பெருங்காப்பியத்திற்குரிய எல்லா இலக்கணங்களும் நிரம்பியுள்ளன எனலாம். சுந்தரரே இக் காப்பியத்தின் தன்னிகரில்லாத் தலைவர் ஆவர். "சுந்தரமூர்த்தி நாயனாரது முந்திய வரலாற்றைத் திருமலைச் சருக்கம் முதலிற் கூறுகின்றது. அப்பால், நாட்டுச் சிறப்பைக் கூறியபின், திருவாரூர் நகரச் சிறப்பினைக் கூறுகிறது. அதற்குச் சிறப்புக் கூறும் நோக்கத்தால் மனுச்சோழன் சரிதையை விளக்குகின்றார். இங்ஙனம் காப்பியத்திற்குரிய இரண்டும் (நாட்டுச் சிறப்பும், நகரச் சிறப்பும்) அமைகின்றன” என்பர்.[1] சிவக்கவிமணி சி. கே. சுப்பிரமணிய முதலியார் அவர்கள், "பெரிய புராணத்தைத் தனித்தனி பற்பல சரிதங்கள் கோத்த கோவை என்று சிலர் கருதுகிறார்கள். அது தவறு. பெரிய புராணமானது தொடர்நிலைச் செய்யுளாய் ஒரு பழஞ்சரிதத்தைச் சொல்வதாய் ஒரு பெரிய உள்ளீடாகிய கற்பனையை எடுத்துக்காட்டுவதாயுள்ள ஒரு பெருங்காவியமேயாகும்" என்று நிறுவுகிறார்கள்.[2]

சேக்கிழார் புலமை

இவர் சங்க நூற் பயிற்சியுடையவர் என்பது பெரிய புராணத்தால் தெரிய வருகின்றது. 'புலிப்பல் கோத்த புலம்பு மணித் தாலி', 'புலிப்பல் தாலிப் புதல்வர்ப் புல்லி' என்ற அகநானூற்றுத் தொடரையும், குறுந்தொகைத் தொடரையும், 'இரும்புலி யெயிற்றுத் தாலி' என்று கண்ணப்ப நாயனார் புராணத்தில் கையாளுகிறார். 'அருமழை தரல் வேண்டின் தருகிற்கும் பெருமையளே' என்ற கலித்தொகைத்


  1. திரு. கி. வா. ஜகந்நாதன், தமிழ்க் காப்பியங்கள், ப. 35, 2.
  2. திரு. சி. கே. சுப்பிரமணிய முதலியார், பி, ஏ. சேக்கிழார், ப, 34