பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

தமிழ் இலக்கிய வரலாறு


தொடரை 'மழைக்குதவும் பெருங்கற்பின் மனைக்கிழத்தி" என்று மானக்கஞ்சாற நாயனார் புராணத்தில் எடுத்தாண்டுள்ளார்.

நூல் நுவலும் செய்திகள்

இதில் கூறப்படுகின்ற அடியார்கள் பல்வேறு நாடும் ஊரும் சாதியும் தொழிலும் கொண்டவர்கள். இவர்களுடைய வாழ்க்கையை விவரிக்கும் முறையில் அக்காலச் சமுதாய வரலாறு கூறப்படுகிறது. மக்கள் வாழ்க்கை, பழக்க வழக்கங்கள், கல்விமுறை, அரசு, ஆறுகள், மலைகள், காடுகள், வாவிகள், சோலைகள், கோயில்கள், இசை, நடனம் முதலிய இன்னோரன்ன பல செய்திகள் புராணத்தில் பெரிய புலப்படுத்தப்படுகின்றன.

சேக்கிழார் தொண்டு

இரண்டாம் குலோத்துங்கனுக்கு அமைச்சராய் விளங்கியதால், அடியார்கள் வரலாற்றினையும் வாழ்க்கை நிகழ்ச்சிகளையும் கண்டறிய அவர்கள் வாழ்ந்த இடங்களுக்கும், சென்ற ஊர்களுக்கும், பாடல்கள் பாடிய கோயில்களுக்கும் சென்று வேண்டிய குறிப்புகளைத் திரட்டினார். இவர் நேர்மையார்வம் நெஞ்சிலே நிரம்பப் பெற்றவர். (Man of principle and sincerity) கல்வெட்டுகளையும் ஊன்றிக் கவனித்திருக்கிறார். 'தத்தா, நமரேகாண்' என்ற தொடர், முதலாம் இராசேந்திர சோழனின் தஞ்சாவூர்க் கல்வெட்டில் காணப்படுகிறது. இத் தொடரை அப்படியே மெய்ப்பொருள் நாயனார் புராணத்தில் கையாளுகிறார்.

இவருடைய இயற்பெயர் 'அருண்மொழித் தேவர்' என்பர் பலர்: கல்வெட்டு, “இராமதேவர்" என்று கூறும். இவர் புலியூர்க்கோட்டத்துக் குன்றத்தூரினர்; வேளாள மரபினர். கல்வெட்டுகள் இவரை 'மாதேவடிகள்' என்று சிறப்பிக்கின்றன.